தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அதனுடன் தொடர்புடைய விபரங்கள் குறித்து கருத்து வெளியிட ஒரு நிமிட அவகாசம் கோரிய ஞானசார தேரரின் கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தைக் கழிப்பதற்காக சிறைச்சாலைக் காவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட முன்னர் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
எனினும் அவரது கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு ஏகமனதாக நிராகரித்துள்ளது.
விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை
அத்துடன் அவரது சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தைக் கழிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை இந்நாட்டின் பௌத்த பிக்குகளுக்கு நல்லதொரு பாடமாகும் என்று கலகொட அத்தே ஞானசார தேரர் உரத்த குரலில் விமர்சித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில், தன் மீதான சிறைத் தண்டனை குறித்து கலகொடஅத்தே ஞானசார தேரர் காரசாரமானக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
எவருக்கும் பயமுமில்லை
உரத்த குரலில் முழக்கம் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்ட போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், ‘நாட்டிலுள்ள பௌத்த பிக்குகள் இதையொரு நல்ல பாடமாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நான் நாட்டின் நன்மைக்காகவே இந்தச் தியாகங்களைச் செய்தேன்.என்னைச் சிறையில் அடைத்துவிட்டால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடுமா?உண்மையைப் பேசுவதற்கு நாம் பயப்பட வேண்டுமா?
நாங்கள் பிறரின் அன்னதானத்தை உண்டு நாட்டின் நலனுக்காகவே இந்தத் தியாகங்களைச் செய்தோம்.நாங்கள் யாருக்கும் கடனுமில்லை, எவருக்கும் பயமுமில்லை’ என்று உரத்த குரலில் முழங்கியுள்ளார்.
அதனையடுத்து சிறைச்சாலை வாகனத்தில் அவர் வெலிக்கடை சிறைச்சாலை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் அழைத்துச் செல்லப்பட்ட வாகனத்துக்கு விசேட அதிரடிப்படையின் வாகனப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.












