மக்களின் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரைப் பார்த்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சம்பளங்கள் சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறை, மீட்பு பணிகள் துறை சார்ந்த மானிய கோரிக்கைகளின் மீதான விவாதங்களுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் பதிலுரை நிகழ்த்தினார்.
” எதிர்க்கட்சிகள் போல் எனக்கு அரசியல் செய்ய விருப்பமில்லை. தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து பேரவையில் எதிர்க்கட்சிகள் வைக்கும் கருத்தை கூட மக்கள் மீது அவர்களுக்குள்ள கவலையை வெளிப்படுத்துவதாகவே இந்த அரசு எடுத்துக் கொள்கிறது.
உள்நோக்கத்துடன் கூடிய கருத்தாக இருந்தாலும் கூட, அதில் உண்மை இருக்கிறதா என்று பரிசீலிக்கப்படுகிறது. குற்றங்களுக்கு போதை கலாச்சாரம் தான் காரணம் என கண்டறியப்பட்டு, போதை கலாச்சாரத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை நான்காயிரம் கிலோவிற்கு மேல் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற நாள் முதல் ஊழலற்ற நிர்வாகம் என்பதில் உறுதியாக உள்ளேன். இளம் வயதினர் குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்திருக்கிறது.
அதனையும் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து பேசும் எதிர்க்கட்சியினருக்கு கடந்த 2001- 2025 ஆம் ஆண்டு கால குற்றங்களை பட்டியலிட்டு சென்று விட எனக்கு விருப்பமில்லை.
அரசியல் ரீதியாக எந்தக் கருத்தையும் கூறலாம். ஆனால் தனிப்பட்ட தாக்குதல்கள் பேசக்கூடாது.
சட்டப்பேரவையில் ஒரு எம்எல்ஏ ‘எலும்பை உடைப்பேன்’ என ஆர்த்தோ சர்ஜன் போல் பேசுகிறார். இன்னொரு எம் எல் ஏ, ‘திமுகவிற்கு வாக்களிக்காத மக்களுக்கு நல்ல சாவே வராது’ என பேசுகிறார். இவ்வளவு நாட்களாக இதே மக்கள் தான் இவர்களுக்கு ஓட்டு போட்டார்கள். இதை போல் பேசி பேசி தான் சட்டப்பேரவையில் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கின்றனர் மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்.
ஆனால் நான் தமிழ் தமிழர், தமிழ்நாடு என வாழ்கிறேன். ஒரு எம்ஜிஆர் பாடலில் ‘மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்வார். தம் மக்கள் நலம் என்றேதான் வாழ்வார்’ என்று இருக்கும். அவர் யாரை நினைத்து பாடினாரோ தெரியாது. ஆனால் தமிழக வெற்றி கழகத்தினர் தமிழக மக்கள் நலனை மட்டும்தான் கருத்தில் கொள்வோம். அதனால் தான் மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாவும் தொட மாட்டோம். தொட்டவர்களையும் விடமாட்டோம் என கூறுகிறோம்.
எதற்கெடுத்தாலும் ‘மிசா.. மிசாவையே பார்த்தவர்கள்’ என்று பேசுகிறார்கள். மிசாவை பற்றிய வரலாறு எல்லோருக்கும் தெரியும்.
ஊழல் குற்றச்சாட்டு என்று சொன்னால், ‘ஆதாரம் கொடுங்கள்’ என்றுதான் கேட்பார்களே தவிர ‘ஊழல் செய்யவில்லை’ என்று திமுகவினர் சொல்ல மாட்டார்கள்.
ஆதாரத்திற்காக நாடாளுமன்றம் செல்ல வேண்டாம். நமது நூலகத்திலேயே சர்க்காரியா ஆணையத்தின் புத்தகம் உள்ளது. அதில் அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. ‘மிஸ்டர் கிளீன்..! மிஸ்டர் கிளீன்..!’ என்று சொல்லிக் கொள்பவர்களே திமுக ஆட்சியின் முறைகேடுகளை நீங்களே தெரிந்து கொள்ளலாம். அப்போதே அப்படி என்றால், இப்போது எப்படி என பார்த்துக் கொள்ளுங்கள்.
திமுக ஆட்சி செய்த காலத்தில் 7.5% முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. கட்சி நிதி வாங்கியதில் முக்கிய நபர்கள் ஸ்டாலின் உதயநிதி தான் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
பேச்சின் இடையே ‘எனக்கு கலைஞர் மீது மரியாதை உண்டு. அவரை மரியாதை குறைவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளோம்’ எனக் குறிப்பிட்டார்.
குற்றத்தை பார்க்கும் பார்வையில் மாற்றம் வேண்டும். ஒரு குற்றம் நடைபெற்று விட்டது என்பதற்காக ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் வழங்கு சீர்குலைந்து விட்டது என்று கூறி விட முடியாது. தனிப்பட்ட குற்ற சம்பவத்திற்கும்… மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு இருக்கிறது.
ஒரு குற்றம் நடைபெற்று விட்ட பிறகு அதற்கான பொறுப்பை அரசு மீது சுமத்தி விட்டு, மற்றவர்கள் ஒதுங்கி விட முடியாது. ஏனெனில் அனைத்து குற்றங்களும் கடந்த 100 நாட்களில் தோன்றியதல்ல. ஒவ்வொரு குற்றத்திற்கு பின்னாலும் ஒரு குடும்ப பிரிச்சனை, சொத்து தகராறு, முன் விரோதம், பழிவாங்கும் மனநிலை, போதைப் பொருள் பயன்பாட்டின் தாக்கமாகவும் இருக்கலாம்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சட்டத்தின் மீது பயமில்லாதது, சிலரின் ஆதிக்கத்தின் கீழ் காவல்துறையின் செயல்பாடு… போதை கலாச்சார வளர்ச்சி, சமூக கட்டுப்பாடு குறைதல், சாதிய அடையாளம் நிலம் மற்றும் அதிகாரத்தின் மீதான போட்டி, கலப்புத் திருமணத்திற்கு எதிர்ப்பு, உள்ளூர் அதிகார போட்டி அரசியல், பொருளாதார ஆதிக்கம், சமூக வலை அமைப்புகளின் தாக்கம் போன்ற பல்வேறு சமூக காரணிகளும் குற்றங்களுக்கு பின்னணியாக இருக்கலாம்.
இதனால்தான் கடந்த மாத ஜூலை மாதம் 30 ஆம் திகதி அன்று நடைபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர்களின் மாநாட்டில், ”காவல்துறையின் பணி என்பது குற்றவாளிகளை கைது செய்து விடுவதுடன் முடிந்து விடக்கூடாது. குற்றம் உருவாகும் சூழலை கண்டறிந்து அந்த குற்றம் நடைபெறுவதற்கு முன்பே தடுப்பதை காவல்துறை இலக்காகக் கொண்டு வர வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளேன்.
‘ஒவ்வொரு காவல் நிலையமும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும், வார்டிலும், வீதியிலும், நிலவும் பிரச்சினைகள் குறித்து காவல்துறையினர் முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திமுகவினர் மேடைகளில் திமுக இருக்கும் இடத்தில் தவறு இருக்காது என்பார்கள். ஆனால் திமுக இருக்கும் இடத்தில் தான் தப்பு இருக்கும். தப்பு இருக்கும் இடத்தில் தான் திமுக இருக்கும். திமுகவினர் செய்யும் தவறை சரியாக ஒழுங்காக விஞ்ஞான முறையில் செய்துள்ளனர்.
நான் இங்கே இரண்டு துறை சார்ந்த ஃபைல்களை ஓபன் செய்ததற்கே இப்படி என்றால்… பார்த்துக் கொள்ளுங்கள் மக்களை ஏமாற்றிய போலி பிம்பம்… திமுகவின் பிராண்ட் …உடைக்கப்படும்.
அண்ணா -எம்ஜிஆர்- என்டிஆருக்கு பின் விஜய் தான்.. இறைவனும், இயற்கையும், மக்களும் என்றும் விஜய் பக்கம் தான் இருப்பார்கள்.
அதேபோல் முதலமைச்சருக்கு பதிலாக அமைச்சர்கள் பதிலளிப்பது எல்லா ஆட்சியிலும் நடப்பது தான். நாற்காலிக்காகவோ அதிகாரத்திற்காகவோ நான் இந்த இடத்திற்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்யவே இந்த இடத்திற்கு வந்துள்ளேன்” என்றார்.
இதனிடையே தமிழக முதலமைச்சர் விஜய் இன்று காலை சட்டப்பேரவை கூடியதும் அவருடைய பேச்சில் அனல் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதை நிரூபிப்பது போல் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான திமுக மீது அடுக்கடுக்கான குற்ற சாட்டுகளை சுமத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












