கலம்போ கெப்ஸ் அணிக்கும கண்டி றோயல்ஸ் அணிக்கும் இடையில் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் புதன்கிழமை இரவு நடைபெற்ற எல்பிஎல் நீக்கல் போட்டியில் 68 ஓட்டங்களால் வெற்றியீட்டிய கலம்போ கெப்ஸ் அணி இரண்டாவது தகுதிகாண் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
இரண்டாவது தகுதிகாண் போட்டியில் கோல் கெலன்ட்ஸ் அணியை கலம்போ கெப்ஸ் அணி இதே விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை இரவு எதிர்த்தாடும்.
நீக்கல் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கலம்போ கெப்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பென் மெக்டமட் நான்காவது விக்கெட்டில் ஜனித் லியனகேவுடன் 57 ஓட்டங்களையம் ஐந்தாவது விக்கெட்டில் ஜேம்ஸ் நீஷாமுடன் 58 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டார்.


பென் மெக்டமட் 39 பந்துகளில் ஒரு பவுண்டறி, 7 சிக்ஸ்களுடன் 71 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 32 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஜேம்ஸ் நீஷாம் 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் நுவன் துஷார 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸஹிர் கான் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
204 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கலம்கோ கெப்ஸ் 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவி போட்டியில் இருந்து வெளியேறியது.
லஹிரு இகலகமகே, பவன் சந்தேஷ் ஆகிய இருவரும் 26 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்த்ததால் கண்டி றோயல்ஸ் அணி பெரும் சிக்கலை எதிர்கொண்டது.
நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீரர் லஹிரு இகலகமகே 50 ஓட்டங்களையும் பவன் சந்தேஷ் 21 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் இப்திகார் அஹ்மத் 15 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வனுஜ சஹான் 4 ஓவர்களில் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷாநவாஸ் தஹானி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மல்ஷா தருபதி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் முஜீப் உர் ரஹ்மான் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: வனுஜ சஹான்












