வட அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 23ஆவது பீபா உலகக் கிண்ணத் தொடரில், லொஸ் ஏஞ்சல்ஸில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற 32 அணிகள் சுற்றின் ஆரம்பப் போட்டியில் தென் ஆபிரிக்காவை 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட வரவேற்பு நாடுகளில் ஒன்றான கனடா, முதலாவது அணியாக முன்னோடி கால் இறுதிச் சுற்றில் விளையாட தகுதி பெற்றுக்கொண்டது.
ஆரம்பம் முதல் கடைசிவரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியின் உபாதையீடு நேரத்தில் அணித் தலைவர் ஸ்டீவன் இயூஸ்டாக்கியோ போட்ட கோல் கனடாவை வெற்றி பெறச் செய்தது.

உலகக் கிண்ணத்தில் 32 அணிகள் சுற்றில் இரண்டு அணிகளும் முதல் தடவையாக பங்குபற்றியதாலும் ஒன்றையொன்று வீழ்த்த முயற்சித்ததாலும் இந்தப் போட்டி மிகவும் இறுக்கமாகவும் பரபரப்பாகவும் அமைந்தது.
நேரம் செல்ல செல்ல ஆட்டம் மேலதிக நேரத்திற்குள் செல்லலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது.
ஆனால், உபாதையீடு நேரத்தின் 2ஆவது நிமிடத்தில் (90+2 நி.) தென் ஆபிரிக்காவின் பெனல்டி எல்லைக்கு சற்று வெளியிலிருந்து ஸ்டீவன் இயூஸ்டாக்கியோ பலமாக உதைத்த பந்து தென் ஆபிரிக்கா கோல் காப்பாளரும் அணித் தலைவருமான ரொன்வென் வில்லியம்ஸின் வலப் புற கொல் கம்பத்திற்கு அருகாமையில் கோலினுள் புகுந்தது.

அதனைத் தொடர்ந்து தென் ஆபிரிக்கா கோல் நிலையை சமப்படுத்த கடுமையாக முயற்சித்தது. ஆனால் அதன் முயற்சிகள் கைகூடவில்லை.
எனினும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் 32 அணிகள் சுற்றில் முதல் தடவையாக விளையாடிய திருப்தியுடன் தென் ஆபிரிக்கா அணியினர் நாடு திரும்பவுள்ளனர்.
இப் போட்டியில் வெற்றியீட்டிய கனடா, 16 அணிகளுக்கான முன்னோடி கால் இறுதிச் சுற்றில் நெதர்லாந்து அல்லது மொரோக்கோவை ஹூஸ்டன் விளையாட்டரங்கில் ஜூலை 4ஆம் திகதி எதிர்த்தாடும்.










