தாய்லாந்தின் பாங்கொக் என்.ரி. விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (08) மாலை நடைபெற்ற பூட்டானுக்கு எதிரான சர்வதேச நட்புறவு கால்பந்தாட்டப் போட்டியில் 4 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை அமோக வெற்றியீட்டியது.

பங்களாதேஷில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் (SAFF) போட்டியில் 31 வருடங்களின் பின்னர சம்பியன் பட்டத்தை சூட கங்கணம் பூண்டுள்ள இலங்கைக்கு இந்த வெற்றி மிகப் பெரிய உற்சாகத்தையும் மனவலிமையையும் கொடுத்துள்ளது.

பூட்டானுடனான போட்டியில் வேகம், விவேகம், சிறந்த வியூகம் ஆகிய அனைத்தையும் ஒருங்கே பிரயோகித்து விளையாடிய சுஜான் பெரேரா தலைமையிலான இலங்கை அணி போட்டியின் 16ஆவது நிமிடத்தில் வேட் டெக்கர் மூலம் முதலாவது கோலை போட்டு முன்னிலை அடைந்தது.

அதன் பின்னர் பூட்டான் வீரர்களின் தடுப்பாட்டத்தை ஊடுருவுவதில் இலங்கை வீரர்கள் சற்று சிரமத்தை எதிர்கொண்டனர்.

இடைவேளையின்போது இலங்கை 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளைக்குப் பின்னர் வியூகங்களில் சில மாற்றங்களுடன் விளையாடிய இலங்கை 64ஆவது நிமிடத்தில் பரத் சுரேஷ் மூலம் இரண்டாவது கோலை போட்டது.
தொடர்ந்து 14 நிமிடங்கள் கழித்து வசீம் ராஸீக் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு இலங்கையின் கோல் எண்ணிக்கையை 3ஆக உயர்த்தினார்.
ஆனால், போட்டியின் 80ஆவது நிமிடத்தில் இலங்கையின் பின்களத்தில் ஏற்பட்ட சிறு தடுமாற்றத்தைப் பயன்படுத்தி பூட்டான் வீரர் ரின்ஸின் டோர்ஜி கோல் ஒன்றைப் போட்டார்.
எவ்வாறாயினும் உபாதையீடு நேரத்தில் (90 + 3 நி.) ராகுல் சுரேஷ் கோல் போட 4 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றியீட்டியது.
இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்த போது நான்கு வீரர்களும் 62ஆவது மற்றும் 75ஆவது நிமிடங்ளில் தலா இருவரும் உபாதையீடு நேரத்தில் மூவரும் இலங்கை அணியில் மாற்று வீரர்களாக விளையாடினர்.
இப் போட்டி சிநேகபூர்வ போட்டி என்பதால் இரண்டு அணிகளது இணக்கத்துடன் இலங்கை அணியில் 11 மாற்று வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.












