சுதந்திர தின நிகழ்வின் போது, நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவத்தினரை கௌரவிப்பதை விடுத்து, அவர்களை ‘டிட்வா’ (Ditwa) சூறாவளியின் போது உணவுப் பொட்டலங்களை வழங்கியவர்களாக மட்டும் மட்டுப்படுத்தி ஜனாதிபதி உரையாற்றியமை கவலையளிப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய சபாநாயகர் பாரிய நிதி மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருவதாகவும், எரிபொருளை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அவருக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதிகாரபூர்வ இல்லங்கள் தேவையில்லை எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்களை அனுபவித்து வருவதாகவும், இந்த முறைகேடுகளைச் சுட்டிக்காட்டிய பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை ஒரு மோசமான முன்மாதிரி என்றும் அவர் சாடினார்.
அத்துடன், அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்க ‘ராஜபக்ச வேட்டையை’ மீண்டும் கையில் எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒரே நேரத்தில் சிரந்தி ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை விசாரணை பிரிவுகளுக்கு அழைத்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டது எனக் கூறினார்.
நிலக்கரி ஊழல் மற்றும் சபாநாயகர் மீதான புகார்கள் குறித்து மௌனம் காக்கும் அரசாங்கம், ராஜபக்சவினரை வேட்டையாடுவதன் மூலம் மக்களை திசைதிருப்ப முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.
மேலும், சுதந்திர தினத்தில் இராணுவத்தினர் வெறும் நிவாரணப் பணியாளர்களாகச் சித்திரிக்கப்பட்டதை கடுமையாக விமர்சித்த அவர், முப்படையினர் சம்பளத்திற்காக மட்டும் பணியாற்றியவர்கள் அல்ல எனவும், அவர்கள் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை ஒன்றிணைக்க உயிரைத் தியாகம் செய்தவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி தனது உரையில் இனவாதத்திற்கு இடமில்லை எனக் கூறியதை வரவேற்ற அவர், அதனைச் சொல்லில் மட்டுமன்றிச் செயலிலும் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
சுதந்திர தினத்தன்று வடக்கில் கறுப்புக்கொடி ஏற்றி துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டது, இன்னும் அங்கு இனவாதத் தூண்டல்கள் இருப்பதையே காட்டுவதாகவும், அதனைத் தடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இறுதியாக, சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், விசாரணை நிறுவனங்கள் எவருக்கும் அஞ்சாமல் நேர்மையாகச் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

