துணுக்காய் பிரதேசசெயலர் பிரிவிலுள்ள உயிலங்குளத்திற்கான பிரதான வீதியாக உயிலங்குளத்தினுடைய கட்டுப்பகுதியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவ்வீதியைப் பயன்படுத்துபவர்கள் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
எனவே வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குரிய சுமார் 800மீற்றர் வரையிலான குறித்த வீதியை குளக்கட்டின் கீழ்பகுதியால் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் வலியுறுத்தியதுடன் அவ்வீதியை அமைப்பதற்கான நிதி தேவை எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது வலியுறுத்தலையடுத்து, குறித்த உயிலங்குளம் வீதியை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை அமைச்சர் ஆனந்த விஜயபால வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் கோரியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (22 ) இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
துணுக்காய் உயிலங்குளம் வீதியில், உயிலங்குளம் குளக்கட்டினை பிரதானமான போக்குவரத்துப் பாதையாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உயிலங்குளம், குளக்கட்டின் கீழ்பகுதியினால் போக்குவரத்து வீதியினை அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
எனவே குளக்கட்டின் கீழ்ப்பகுதியால் சுமார் 800மீற்றர் தூரம்வரையான வீதியை அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.
இந்நிலையில் இதுதொடர்பில் துணுக்காய் பிரதேசசெயலாளர் இதற்கு பதிலளிக்கையில்,
குளக்கட்டின் கீழ்பகுதியால் வீதி அமைப்பதானால் வயல்காணி மற்றும் தனியார் மேட்டுக்காணி ஒன்றையும் ஊடறுத்தே இந்த வீதியினை அமைக்கமுடியும்.
அண்மையில் ஆளுநருடன் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் இந்த வீதி அமைப்பதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அக்கலந்துரையாடலில் இவ்வீதியை குளக்கட்டின் கீழ்பகுதியினால் அமைப்பதற்கு உரிய தரப்பினரிடமிருந்து காணியினைப் பெற்றுக்கொள்ளுமாறும் எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்குள் இவ்வீதியினை அமைப்பதற்குரிய காணியை வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு எம்மால் பெற்றுக்கொடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இவ்வாறு பிரதேசசெயலகம் காணியினைப் பெற்றுக்கொடுத்த பிற்பாடு உயிலங்குளக் கட்டின் கீழ்பகுதியால் வீதியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் அதற்கு வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர் பதிலளிக்கையில்,
குளக்கட்டின் பகுதி தாழ் நிலப்பகுதியாகும். எனவே அந்தப்பகுதியில் தரைமுன்னேற்ற ஆய்வுகளையும் மேற்கொள்ளவேண்டியுள்ளது.
மேலும் அவ்வீதி 01km வீதி எனில், அவ்வீதியை அமைப்பதற்கு ஏறத்தாள 200மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படும்.
அதற்குரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றால் குறித்த வீதியை அமைக்கின்ற வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்கமுடியுமெனத் தெரிவித்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், அமைச்சர் அதற்காகத்தான் வருகைதந்துள்ளார். எனவே அவரிடமிருந்து அவ்வீதியை அமைப்பதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ளமுடியுமெனத் தெரிவித்தார்.
இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால குறித்த வீதியை அமைப்பதற்கான திட்டமுன்மொழிவினை தம்மிடம் சமர்ப்பிக்குமாறு வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

