இங்கிலாந்துக்கு எதிராக கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நிறைவடைந்த ஐந்தாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 ஓட்டங்களால் மிகவும் பரபரப்பான வெற்றியை இந்தியா ஈட்டியது.
இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா 2 – 2 என சமப்படுத்திக்கொண்டது.
கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ஓட்டங்களும் இந்தியாவின் வெற்றிக்கு 4 விக்கெட்களும் தேவைப்பட்டதால் போட்டியில் எதுவும் நிகழலாம் என்ற நிலை உருவானது.
கடைசி நாள் ஆட்டத்தை 6 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து மேலதிக 28 ஓட்டங்களுக்கு கடைசி நான்கு விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது.
முதலாம் நாளன்று இடது தோற்பட்டையில் கடும் உபாதைக்குள்ளான கிறிஸ் வோக்ஸ் அடுத்த 3 நாட்களும் விளையாடாமல் ஓய்வுபெற்று வந்தார்.
ஆனால், இங்கிலாந்தின் வெற்றிக்கு மேலும் 17 ஓட்டங்கள் மாத்திரம் தேவைப்பட்டதால் கிறிஸ் வோக்ஸ் இடது கையில் பண்டேஜ் போட்டவாறு ஒற்றைக் கையுடன் துடுப்பெடுத்தாட 11ஆவது வீரராக களம் புகுந்தார்.
கிறிஸ் வோக்ஸை ஒரு பக்கத்தில் வைத்துக்கொண்டு 13 பந்துகளை எதிர்கொண்ட கஸ் அட்கின்ஸன் மொத்தமாக 29 பந்துகளை எதிர்கொண்டு 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மொஹம்மத் சிராஜினால் போல்ட் செய்யப்பட இந்தியா 6 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
லீட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களாலும் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 22 ஓட்டங்களாலும் இங்கிலாந்து வெற்றிபெற்றிருந்தது.
பேர்மிங்ஹாமில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 336 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றிருந்தது.
போட்டியில் இரண்டு நாட்கள் முழுமையாக இருந்தபோது 3ஆம் நாள் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அன்றைய தினம் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
நான்காம் நாளன்று தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 3 விக்கெட்களை இழந்து 301 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பலமான நிலையில் இருந்ததுடன் நான்காம் நாளன்றே வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இங்கிலாந்தின் அடுத்த 3 விக்கெட்களை 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியதால் போட்டியில் எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற நிலை உருவானது.
இங்கிலாந்து 6 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதால் அது இந்தியாவுக்கு சாதகமாக மாறியது.
ஹெரி ப்றூக், ஜோ ரூட் ஆகிய இருவரும் மிகத் திறமையாக இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு நான்காம் நாளன்று குவித்த சதங்கள் இறுதியில் வீண் போயின.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் 224 ஓட்டங்களையும் இங்கிலாந்து 247 ஓட்டங்களையும் இந்தியா 2ஆவது இன்னிங்ஸில் 396 ஓட்டங்களையும் பெற்றன.
எண்ணிக்கை சுருக்கம்
இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 224 (கருண் நாயர் 57, சாய் சுதர்சன் 38, வொஷிங்டன் சுந்தர் 26, கஸ் அட்கின்சன் 33 – 5 விக்., ஜொஷ் டங் 57 – 3 விக்.)
இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 247 (ஸக் க்ரோவ்லி 64, ஹெரி ப்றூக் 53, பென் டக்கெட் 43, ஜோ ரூட் 29, ப்ரசித் கிரிஷ்ணா 62 – 4 விக்., மொஹம்மத் சிராஜ் 86 – 4 விக்.)
இந்தியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 396 (யஷஸ்வி ஜய்ஸ்வால் 118, ஆகாஷ் தீப் 66, ரவிந்த்ர ஜடேஜா 53, வொஷிங்டன் சுந்தர் 53, த்ருவ் ஜுரெல் 34, ஜொஷ் டங் 125 – 5 விக்., கஸ் அட்கின்சன் 127 – 3 விக்., ஜெமி ஓவர்ட்டன் 98 – 2 விக்.)
இங்கிலாந்து வெற்றி இலக்கு 374 ஓட்டங்கள் – 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 367 (ஹெரி ப்றூக் 118, ஜோ ரூட் 103, பென் டக்கெட் 54, மொஹமத் சிராஜ் 104 – 5 விக். , ப்ரதிஷ் கிரிஷ்ணா 126 – 4 விக்., )
ஆட்டநாயகன்: மொஹமத் சிராஜ் (86 – 4 விக்., 104 – 5 விக்.)
இந்தியாவுக்கான தொடர்நாயகன்: ஷுப்மான் கில் ( 4 சதங்களுடன் 754 ஓட்டங்கள்)
இங்கிலாந்துக்கான தொடர்நாயகன்: ஹெரி ப்றூக் (2 சதங்களுடன் 481 ஓட்டங்கள், 14 பிடிகள்)