இந்திய விமான சேவை நிறுவனமான கோ ஃபெர்ஸ்ட் (Go First ) வங்குரோத்து பாதுகாப்பு கோரியுள்ளது.
இந்தியாவின் தேசிய கம்பனிச் சட்ட தீர்ப்பாயத்திடம் தனது வங்குரோத்து மனுவை கோ பெர்ஸ்ட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
மே 3 முதல் 5 ஆம் திகதிவரையான விமானப் பயணங்களை தான் இரத்துச் செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
வர்த்தகர் நுஸ்லி வாடியாவுக்குச் சொந்தமான, வாடியா குழுமத்தினால், கோ எயார் என்ற பெயரில், 2005 ஆம் ஆண்டு கோ பெர்ஸ்ட் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.
இந்திய அரசாங்க புள்ளிவிபரங்களின்படி, கடந்த மார்ச் மாதம் இந்தியாவின் 5 ஆவது மிகப் பெரிய உள்ளூர் விமான சேவையாக கோ பெர்ஸ்ட் விளங்கியது. 6.9 சதவீத சந்தைப் பங்கை அது கொண்டிருந்தது.
அமெரிக்காவின் விமான என்ஜின் தயாரிப்பு நிறுவனமான பிராட் அன்ட் வைட்னி நிறுவனத்திடமிருந்து வழங்கப்பட்ட விமான என்ஜின்களில் ஏற்பட்ட கோளாறுகள் மற்றும் உதிரி என்ஜின்கள் முறையாக கிடைக்காதமை காரணமாக தனது விமானங்களின் அரைவாசியை தரையிறக்கி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் வங்குரோத்து பாதுகாப்பு அவசியமாகவுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்விமான சேவையின் செயற்பாட்டை முழுமையான செயற்பாட்டு நிலைக்;கு கொண்டுவருவதற்காக உதிரியான என்ஜின்களை விநியோகிக்குமாறு விடுக்கப்பட்ட, சிங்கப்பூர் தீர்ப்பாயம் ஒன்றின் உத்தரவின்படி செயற்பட பிராட் அன்ட் வைட்னி நிறுவனம் தவறியதாக கோ பெர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், தீர்ப்பாய உத்தரவுக்கு இணங்கி தான் செயற்படுவதாகவும், அனைத்து வாடிக்கையாளர்களினதும் விநியோக அட்டவணைக்கு தான் முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.