Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையிடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு எழுப்பியுள்ள கேள்வி

March 11, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கை உட்பட 6 நாடுகள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் மீளாய்வு கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்

மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பதவியுயர்வுகள் குறித்து மிகுந்த கரிசனையை வெளிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு, மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பான விசாரணை செயன்முறையில் மேற்கொள்ளப்படும் அநாவசியமான தலையீடுகள், நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையில் நிறைவேற்றதிகாரம் தடையிடாதிருப்பதனை உறுதிப்படுத்தாமை என்பன தொடர்பிலும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான 6 ஆவது மீளாய்வுக்கூட்டத்தொடர் கடந்த 8 – 9 ஆம் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெற்றது. 

இலங்கை பிரதிநிதிகள் குழுவின் பங்கேற்புடன் நடைபெற்ற இம்மீளாய்வுக்கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டதுடன், பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் இலங்கை சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகளிடம் கேள்விகளும் எழுப்பப்பட்டன.

குறிப்பாக உள்நாட்டுப்போரின்போது இடம்பெயர்ந்தோரை மீள்குடியமர்த்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டிய மீளாய்வுக்குழு உறுப்பினர்கள், இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 92 சதவீதமான காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமையையும் வரவேற்றனர்.

அதேவேளை ‘கடந்த 2020 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக நீதிமன்றக்கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை வலுவிழக்கச்செய்யப்பட்டதுடன், நீதிபதிகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்புடைய கட்டமைப்புக்களின் உறுப்பினர்களின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு மட்டுமீறிய அதிகாரங்கள் வழங்கப்பட்டன. 

அதனைத்தொடர்ந்து அரசியலமைப்புப்பேரவையை மீள ஸ்தாபிப்பதற்கும், முக்கிய கட்டமைப்புக்களுக்கான உறுப்பினர்களின் நியமனத்தை முன்னரைப்போன்று தொடர்வதற்குமென கடந்த 2022 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. 

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்கால அரசியலமைப்புத்திருத்தங்களின் ஊடாக நீதிமன்றக்கட்டமைப்பின் சுயாதீனத்தன்மையும் மனித உரிமைகள்சார் கட்டமைப்புக்களின் சுதந்திரமும் பாதுகாக்கப்படுவதை அரசாங்கம் எவ்வாறு உறுதிப்படுத்தப்போகின்றது?’ என்றும் மீளாய்வுக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும் கருத்து வெளியிட்ட மனித உரிமைகள் மீளாய்வுக்குழு உறுப்பினர்கள் கூறியதாவது:

கடந்த 2000 ஆம் ஆண்டு தமிழர்கள் எண்மரைப் படுகொலைசெய்த குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலைசெய்யப்பட்டார். 

எனவே மட்டுமீறிய நிறைவேற்றதிகாரம் என்பது தீவிர கரிசனைக்குரிய விடயமாகக் காணப்படுவதுடன், மிகமோசமான மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து விடுபடுவதற்கு இடமளிக்கின்றது. 

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கலை மேற்பார்வை செய்வதற்கான நடைமுறைகள் என்ன? மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட நபருக்குரிய நீதி எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகின்றது? அதேபோன்று சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்குப் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளமை கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இருப்பினும் பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்ட பதவியுயர்வை நியாயப்படுத்தும் வகையிலான விளக்கம் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினர்.

அதுமாத்திரமன்றி கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பான விசாரணை செயன்முறையில் மேற்கொள்ளப்படும் அநாவசியமான தலையீடுகள், நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையில் நிறைவேற்றதிகாரம் தடையிடாதிருப்பதனை உறுதிப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அவர்கள், மனித உரிமை மீறல் வழக்கு விசாரணைகளில் மிகக்குறைந்தளவிலான முன்னேற்றமே அடையப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

போர்க்குற்றங்களும், மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களும் உள்நாட்டு சட்டத்தில் குற்றமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதா? எனவும், அத்தனை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் என்ன? எனவும் மனித உரிமைகள் மீளாய்வுக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்தோடு அரசியலமைப்பு மறுசீரமைப்பு, மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல், நீதிமன்றக்கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை, உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் விவகாரம், மதரீதியிலான வெறுப்புணர்வு, அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இம்மீளாய்வுக்கூட்டம் இன்றியமையாததாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். 

Previous Post

ரயிலில் கைவிடப்பட்ட நிலையில் பிறந்து 10 நாட்களேயான சிசு மீட்பு

Next Post

வடக்கின் சமரில் சென். ஜோன்ஸை 9 விக்கெட்களால் வீழ்த்தி 29 ஆவது வெற்றியை சுவைத்தது யாழ். மத்திய கல்லூரி

Next Post
வடக்கின் சமரில் சென். ஜோன்ஸை 9 விக்கெட்களால் வீழ்த்தி 29 ஆவது வெற்றியை சுவைத்தது யாழ். மத்திய கல்லூரி

வடக்கின் சமரில் சென். ஜோன்ஸை 9 விக்கெட்களால் வீழ்த்தி 29 ஆவது வெற்றியை சுவைத்தது யாழ். மத்திய கல்லூரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures