மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் செயற்பட்டதன் காரணமாகவே கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கம் வீட்டுக்கு செல்லவேண்டி ஏற்பட்டது.
அதனால் தேர்தல் நடத்துவதில்லை என மக்களின் கோரிக்கைகளை நிராகத்தால் அந்த நிலைமையே ஏற்படும் என்பதை ஜனாதிபதி மறந்துவிடக்கூடாது என எதிர்க்கட்சித் தலைரவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தேர்தல் நடத்துவதில்லை என ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து தெரிவித்த விடயம் தொடர்பில் நாங்கள் ஆச்சரியப்படத் தேவையில்லை.
ஏனெனில் அவர் தேசிய பட்டியலிலே பாராளுமன்றத்து வந்தார், பின்னர் கோத்தாபய ராஜபக்ஷ்வினால் பிரதமராக நியமிக்கப்பட்டு, பாராளுமன்ற பெரும்பான்மை மூலம் ஜனாதிபதியாக தெரிவாகினார்.
அதனால் இந்த நாட்டின் சர்வஜன வாக்கு பலத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. அதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சம் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி, பின்னர் பொதுத் தேர்தலில் 68 இலட்சம் வாக்குகளை பெற்று பிரதமர், அரசியலில் பிரபலமாகி நாட்டின் நிதி அமைச்சராகிய அந்த மூன்று பேரும் தேர்தலில் தோல்வியடைந்து வீட்டுக்கு செல்லவில்லை. மக்களின் பலத்தினாலே விட்டுச்சென்றார்கள்.
அதனால் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத காரணத்தினாலே கோத்தாபய ராஜபக்ஷ், மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் பசில் ராஜபக்ஷ் ஆகிய மூன்றுபேறும் தங்களின் பதவிகளில் இருந்து விலகிச்செல்ல நேரிட்டது என்பதை ஜனாதிபதி மறந்துவிடக்கூடாது.
எனவே ஜனநாயகத்தை மதிப்பதாக தெரிவிக்கும் ஜனாதிபதி, தேர்தல் நடத்தப்போவதில்லை என பாராளுமன்றத்துக்கு தெரிவித்த கருத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு, தேர்தலை நடத்தி, திரிபுபடுத்தப்பட்டிருக்கும் மக்கள் ஆணையை உறுதிப்படுத்தி வெளிப்படைத்தன்மையுடன் நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஜனாதிபதியின் கூற்றால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். அதனால் அந்த கவலையுடன் இந்த நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்படவேண்டும். அந்த மாற்றம் அமைதியான ஜனநாயக முறையில் இடம்பெறவேண்டும். நிச்சயமாக அந்த பாரிய மக்கள் சக்தி உருவாகும்.
அத்துடன் ஜனாதிபதி நன்றியுடையவராக இருந்தால் மக்கள் போராட்டத்துக்கு நன்றி செலுத்தவேண்டும். அவர் ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு போராட்டமே காரணமாக இருந்தது. நாட்டில் அமைதியான பொது மக்கள் போராட்டமே இடம்பெற்றது.
அலரிமாளிகையில் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மைனா கோகம மற்றும் கோட்டா கோகம போராட்டக்காரர்கள் மீது மிலேச்சத்தனமான முறையில் மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே அமைதியான போராட்டம் வன்முறையாக மாறியது.
அதனால் அன்றைய தினம் காலையிலும் மாலையிலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை சட்டத்துக்கு முன்னால் கொண்டுவந்து சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்.
ஆனால் மக்கள் தகங்களின் உரிமைகளுக்காக அமைதியான முறையில் வீதிக்கிறங்கி போராடுவதை அவசரகால சட்டத்தை பயன்படுத்தி இராணுவத்தை இறக்கி அடக்குவதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. எந்தவாெரு அமைதியான மக்கள் போராட்டத்துக்கும் நாங்கள் ஆதரவளிப்போம்.