பிறந்த குழந்தை பேசிய அதிசய நிகழ்வு

பிறந்த குழந்தை பேசிய அதிசய நிகழ்வு

அல்லாஹ்வே படைத்துப் பரிபக்குவப்படுத்துபவன். அவனே எங்களுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான். அவனையே நீங்கள் வணங்குங்கள். இதுவே நேரான வழியாகும்.

பிறந்த குழந்தை பேசிய அதிசய நிகழ்வு
மர்யம் (அலை) அவர்கள் பெற்றெடுத்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு தம் ஊருக்கு, தம் சமூகத்தார் இருக்கும் இடத்திற்குத் திரும்பினார்கள்.

பிறந்த குழந்தையுடன் மர்யம் (அலை) அவர்களைப் பார்த்தவுடன் அவருடைய உறவினர்களும், ஊர் மக்களும் ஒன்று திரண்டு கூடிக் கூடிப் பேசினர். அதன் பிறகு எல்லோரும் சேர்ந்து சென்று அந்தக் குழந்தையைப் பற்றிக் கேள்விகள் தொடுத்தனர்.

“இது யாருடைய குழந்தை? என்ன விபரீதத்தைச் செய்துள்ளாய் என்று அறிவாயா? நல்ல குடும்பத்தில் நல்ல தாய் – தந்தைக்குப் பிறந்த நீ இப்படியானதொரு இழிவான காரியத்தைச் செய்ய உனக்கு வெட்கமாகயில்லை?” என்று மர்யம் (அலை) அவர்களைக் கேட்கக் கூடாத கேள்விகளைக் கேட்டனர்.

மர்யம் (அலை) இறைவனுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, இறைவனின் கட்டளையின்படி எதற்குமே பதில் பேசாமல், குழந்தையிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்பதுபோல் சைகை காட்டினார்கள்.

ஆத்திரமடைந்தவர்களாக மக்கள் “நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையிடமா கேட்க முடியும்? குழந்தைதான் எப்படிப் பேசும்?” என்று சொல்லி வாய் மூடும் முன்பே, அந்தக் குழந்தை பேசியது.

“நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன். அவன் எனக்கு ‘இன்ஜீல்’ என்னும் வேதத்தைக் கொடுத்திருக்கின்றான். என்னை அவனுடைய நபியாகவும் ஆக்கியிருக்கின்றான். நான் எங்கிருந்தாலும் அவனுடைய பேரருள் என் மீது எப்போதும் இருக்கும். நான் இந்த உலகத்தில் இருக்கும் காலம்வரை தொழுகையையும், ஸகாத்தையும் (தர்மத்தையும்) நிறைவேற்றவும், நான் என் தாயாருக்கு நன்றி செலுத்தவும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். துளியும் பெருமை இல்லாதவனாக என்னை ஆக்கியுள்ளான். நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று அந்தக் குழந்தைப் பேசியது.

மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். அக்குழந்தைக்கு மர்யமுடைய மகன் ஈஸா என்று பெயர் வைக்கப்பட்டது.

ஈஸாவின் பிறப்பு பற்றிய சந்தேகம் கொண்டிருப்பவர்களுக்கு, திருக்குர்ஆனின் இறை வசனங்கள் தெளிவைத் தந்தன. அல்லாஹ் தனக்குப் புதல்வனை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவன் தூயவன். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று சொன்னால் உடனே அது ஆகிவிடும்.

அல்லாஹ்வே படைத்துப் பரிபக்குவப்படுத்துபவன். அவனே எங்களுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான். அவனையே நீங்கள் வணங்குங்கள். இதுவே நேரான வழியாகும்

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *