வான்கூவரில் வீடுகளின் விற்பனையில் வீழ்ச்சி
கனடாவின் வான்கூவரில் வீடுகளின் விற்பனை கடந்த ஜூலை மாதத்திலும் கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய நிலபுலன் விடயங்கள் குறித்த சங்கத்தின் தகவல்களின்படி, அங்கு நிலவும் தொடர் குளிர் காலநிலையே இந்த வீடு விற்பனை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து கனேடிய நிலபுலன் விடயங்கள் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த ஜூன் மாத வீடு விற்பனையுடன் ஒப்பிடும்பொhழுது ஜூலை மாதத்தின் வீடு விற்பனை 1.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோன்று வருடாந்த வீடு விற்பனையுடன் ஒப்பிடும்பொழுது இது 2.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் கனடாவின் வீடுகளின் விலை இந்த வருடம் 12 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. எனவே, வீடுகளின் விற்பனை குறைவடைந்தமைக்கு இந்த விலை அதிகரிப்பும் முக்கிய காரணியாக அமையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே வீடு விற்பனை குறைவடைந்துவரும் நிலையில் இந்நிலைமை தொடர்ந்தால் கனடாவின் பொருளாதாரத்தில் ஏதாவது பாதிப்புக்கள் ஏற்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது