லூசியானாவை வாட்டும் வரலாறு காணாத வெள்ளம்
வரலாறு காணாத வெள்ளத்தினால் அமெரிக்காவின் லூசியானா மாநிலம் நீரில் மூழ்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் அங்கு பெய்துவரும் கனமழை காரணமாக வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டு குறித்த மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 4 நாட்களாக தொடரும் வெள்ளத்தினால் பாட்ன் ரூஜ் பிராந்தியம் முற்றாக சேதமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாழமுக்கம் மற்றும் அதிகூடிய ஈரப்பதம் ஆகிய இரு வேறு காலநிலைகள் காரணமாக இந்த மாநிலத்தில் கனமழை தொடர்வதாக அறிக்கையிடப்படுகின்றது.
வீட்டக் கூரைகளை எட்டும் அளவிற்கு வெள்ள நீர் தேங்கியிருப்பதால் மக்களை வெளியேற்றுவதில் மீட்புப்பணியாளர்கள் மீகுந்த சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மீட்புக் குழு அதிகாரி, ‘நாங்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் மக்களை காப்பாற்றியதை எண்ணி பெருமையடைகின்றேன். அதேவேளை, லூசியானா மக்கள் ஒருவருக்கொருவர் மிகுந்த உதவியாகவும், துணையாகவும் இருந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது’ என்றுள்ளார்.
இதேவேளை, வெள்ளத்தில் மூழ்கியுள்ள பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும், காப்பாற்றப்பட்ட மக்களை பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் யாவும் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.