அங்கொட லொக்கா கோயம்புத்தூரில் உயிரிழந்தமை குறித்து வெளியாகியுள்ள தகவல்களை உறுதிப்படுத்த இந்திய தூதரகத்தின் உதவியை நாடவுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் ஜாலிய சேனரட்ண தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் வெளிநாடொன்றுடன் தொடர்புபட்டுள்ளது என்பதால் இராஜதந்திர அணுகுமுறை பேணப்படும் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அங்கடலொக்கா கோயம்புத்தூரில் கொலை செய்யப்பட்டுள்ளார் என கோயம்புத்தூர் காவல்துறையினரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த அங்கொட லொக்கா என்ற நபருக்கு உதவுவதற்காக போலியான ஆவணங்களை வழங்கிய மூவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள கோயம்புத்தூர் காவல்துறையினர் அங்கொட லொக்கா ஜூலை மாதத்தில் கோயம்புத்தூரில் இறந்துள்ளார் அவரது உடல் மதுரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
மதுரையை சேர்ந்த ஆணும் திருப்பூரைசேர்ந்த பெண்ணும் அங்கொட லொக்காவிற்கும் அமானி தஞ்சி என்ற பெண்ணிற்கும் போலியான ஆவணங்களை வழங்கி உதவியுள்ளனர் இதன் மூலம் வெளிநாட்டவர்கள் கோயம்புத்தூரில் மறைந்திருப்பதற்கு உதவியுள்ளனர் என கோயம்;புத்தூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பை சேர்ந்த அமானி தஞ்சி,மதுரையைசேர்ந்த சிவகாம சுந்தரி ஈரோட்டை சேர்ந்த தயனேஸ்வரன் ஆகியோரை இந்த விவகாரம் தொடர்பில் கைதுசெய்துள்ளதாக வும் அங்கொட லொக்கா பிரதீப் சிங் என்ற பெயரில் ஆதார் அட்டையை பெற்று இந்தியாவில் தங்கியிருந்தார் எனவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
பீளமேடு பொலிஸ்நிலையத்துக்கு ஜூலை நான்காம் திகதி சென்ற சுந்தரி என்ற பெண் தனது உறவினரான பிரதீப் சிங் என்பவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளார்,பிரதீப்சிங்கின் ஆதார் அட்டையை சமர்ப்பித்தார் எனவும் கோயம்புத்தூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடந்து இடம்பெற்ற விசாரணையின் போது காவல்துறையினர் ஆதார் அட்டை மோசடியை கண்டுபிடித்துள்ளனர்,இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது உயிரிழந்தவர் இலங்கையை சேர்ந்த அங்கொட லொக்கா என்பதும் அவர் கோயம்புத்தூரின் சேரன் மாநகரில் உள்ள கலப்பட்டி வீதியில் தஞ்சி என்ற பெண்ணுடன் தங்கியிருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் அங்கொட லொக்காவிற்கு போலி ஆவணங்களை பெற்றுக்கொடுத்த இருவர் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.
அங்கொட லொக்காவிற்கு இருதய வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து தஞ்சி அவரை ஜூலை மூன்றாம் திகதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்,ஆனால் அங்கொட லொக்கா அங்கு உயிரிழந்துள்ளார்.