எகிப்து நாட்டில் பேருந்தில் பயணம் செய்த 29 கிறித்துவர்களை சரமாரியாக சுட்டுக் கொலை செய்ததற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எகிப்து நாட்டில் உள்ள மின்யா நகரில் நேற்று கொப்டிக் கிறித்துவர்கள் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். சில நிமிடங்களுக்கு பின்னர், பேருந்தை வழிமறித்த சில மர்ம நபர்கள் சரமாரியாக தூப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் குண்டு காயங்களுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிறித்துவர்களை கொன்றதற்கு தற்போது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
எகிப்து நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அரசாங்கம் செயல்பட்டு வருவதால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் இன்று தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் அறிக்கையை தொடர்ந்து அண்டை நாடான லிபியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் முகாம்கள் மீது எகிப்து வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
மேலும், எகிப்து நாட்டில் தீவிரவாதம் பரவுவதற்கு அனுமதிக்க மாட்டோம் எனவும் தீவிரவாதிகள் கூண்டோடு அழிக்கப்படுவார்கள் எனவும் எகிப்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.