Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ATAஆல் பெரும் ஆபத்து | சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கை

April 8, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தாலிக்கொடி அறுத்துத் திருடிய ஸ்ரீலங்கா இராணுவ சிப்பாய் வசமாக சிக்கினார்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள்மீது மிகமோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இச்சட்டமூலத்தைத் தோற்கடிப்பதை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயலாற்றுவதற்குக் கூட்டாக இணங்கியுள்ளனர்.  

அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் பின்னணியில், அச்சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதைத் தாமதிக்கப்போவதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் அடக்குமுறைத்தன்மையைக் கருத்திற்கொண்டு, அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அதனை சவாலுக்குட்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆராயும் நோக்கிலான கலந்துரையாடல் நிகழ்வொன்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ‘சர்வஜன நீதி’ அமைப்பினால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பு மன்றக்கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், தற்போது அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தும்போது அச்சட்டமூலத்தின் சட்டபூர்வத்தன்மை குறித்துப் பரிசீலிக்கப்படுமே தவிர, அதன்விளைவாக மக்கள்மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆராயப்படாது என்றும், எனவே இப்பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் ‘பயங்கர தன்மை’ குறித்து நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி கடந்த 1979 ஆம் ஆண்டு 6 மாதங்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்கு தற்காலிக ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டம் தற்போதுவரை நடைமுறையில் இருக்கும் வரலாறு குறித்தும், அச்சட்டத்தின் விளைவாகப் பல நபர்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட சம்பவங்கள், தான் நீதிமன்றத்தில் ஆஜரான பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழான வழக்குகள் மற்றும் அவற்றில் காணப்பட்ட சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் சுமந்திரன் பகிர்ந்துகொண்டார்.

அதேபோன்று போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் கடந்த அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வாக்குறுதியளித்தது.

இருப்பினும் அவ்வாக்குறுதி ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதை அடிப்படையாகக்கொண்டதே தவிர, பயங்கரவாதத்தடைச்சட்டம் மிகமோசமானது என்ற புரிதலை அடிப்படையாகக்கொண்டதல்ல என்று குறிப்பிட்ட சுமந்திரன், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எதிர்வருங்காலங்களில் மக்கள் போராட்டங்கள் மேலும் வலுப்பெறும் என்றும், அவற்றை அடக்குவதை இலக்காகக்கொண்டே இச்சட்டம் உருவாக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஜனநாயகமும், மனித உரிமைகளும் மிகமோசமாக மீறப்படுவதற்கு வாய்ப்பளிக்கும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் குரலெழுப்பவேண்டும் என்றும், அச்சட்டமூலம் வாபஸ் பெறப்படுவதை முன்னிறுத்தி செயற்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அவரைத்தொடர்ந்து உரையாற்றிய சட்டத்தரணிகளான பவானி பொன்சேகா மற்றும் ஏர்மிஸா ரீகல் ஆகியோர் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஆபத்தான சரத்துக்கள் மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய மிகமோசமான பாதிப்புக்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தனர். ‘பயங்கரவாதம்’ என்ற பதத்துக்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பரந்தளவிலான வரைவிலக்கணம், தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்படல், மீள்பரிசீலனை சபையின் தலைவராக பாதுகாப்புச்செயலாளர் நியமிக்கப்படல், அமைப்புக்களைத் தடைசெய்தல் – இடங்களைத் தடைசெய்தல் – செயற்பாடுகளை மட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படல், மரணதண்டனை அறிமுகப்படுத்தப்படல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர்களால் சுட்டிக்காட்டினர்.

அதேவேளை இந்நிகழ்வில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் தொழிற்சங்கவாதிகளும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எரான் விக்ரமரத்னவும், சுதந்திர மக்கள் சபையின் சார்பில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் இரா.சாணக்கியனும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீமும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். அங்கு உரையாற்றிய அவர்கள் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் மிகமோசமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று ஏற்றுக்கொண்டதுடன் அதனை அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காகப் பிரத்யேக சட்டமொன்றைக் கட்டாயமாக உருவாக்கவேண்டுமெனில், அது சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவானதாக இருப்பதுடன் அதன் வரையறைகள் மிகவும் உயர்ந்த மட்டத்தில் காணப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர். அத்தோடு இச்சட்டமூலம் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதனைப் பாராளுமன்றத்துக்கு வெளியே தோற்கடிக்கவேண்டியது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Previous Post

கண்டியில் மற்றுமொரு யுவதி படுகொலை

Next Post

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் பேராசிரியர்கள் | கல்வி அமைச்சு

Next Post
2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு

விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் பேராசிரியர்கள் | கல்வி அமைச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures