கல்முனை மாநகர சபையை நான்கு பிரதேச சபைகளாகப் பிரிக்க வேண்டும் என்று விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் கலந்து பேசி ஓர் இணக்கப்பாட்டினை எட்டுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தயாராக இருப்பதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் தற்போது வெளிநாட்டு விஜயமொன்றினை மேற்கொண்டிருக்கும் நிலையில் அவரது ஊடகப் பிரிவு அமைச்சின் இத் தீர்மானத்தை தெரிவித்தது. அமைச்சர் ரிசாத் பதியுதீன் நாடு திரும்பியதும் உடனடியாக அமைச்சர் ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையை நான்கு பிரதேச சபைகளாகப் பிரிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையில் தீர்மானமொன்றினை மேற்கொள்வதற்காக ரிசாத் பதியுதீனும் ரவூப் ஹக்கீமும் மக்களுடன் கலந்துரையாடி ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே அமைச்சர் ரிசாத் பதியுதீனின் நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாவது;
அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் அமைச்சர் ரிசாத் பதியுதீனும் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இதேவேளை கல்முனை பிரதேச மக்களின் கோரிக்கை தொடர்பிலும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் கலந்துரையாடுவதற்கு ஆயத்தமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இவ்விவகாரம் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிலைப்பாட்டினை அறிந்துகொள்வதற்கு அவரைப் பலமுறை முயன்றபோதும் அமைச்சரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.