நாட்டில் அவசரகால ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணையானது ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் இன்றைய தினம் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.
இதேவேளை நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பிற்கு அமைவாக அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கான அவசர கால நிலைமைகள் குறித்த ஒழுங்குவிதிகள் மீதான சட்டமூலம் 80 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
இதேவேளை குறித்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த இராஜவரோதயம் சம்பந்தன், தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், விநோனோதராதலிங்கம் ஆகியோர் பங்கு கொள்ளவில்லை.
அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகம் மற்றும் பதுக்குதலை தடுப்பதற்காக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்கான பிரேரணையே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.