வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரித்த இலங்கை: அடுத்து என்ன? ஐ.நாவில் கேள்வி எழுப்பிய நிபுணர்கள்.
வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில், அனைத்துலக சமூகத்தின் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வினை பன்னாட்டு நிபுணர்கள் ஜெனீவாவில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இன்று, ஐ.நா மனித உரிமைச்சபையில் மதியம் 11 மணிக்கு, எனும் தொனிப்பொருளில் பக்க நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த, சிறிலங்காவின் நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுப்பிரதிநிதிகள் இதில் பங்கெடுத்திருந்தனர்.
ஐ.நா மனித உரிமைச்சபை 30.1 தீர்மானம் முன்மொழிந்த பன்னாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில், அனைத்துலக சமூகத்தின் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வியினை அவர்கள் முன்வைத்திருந்தனர்.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை பாரப்படுத்துவதே சிறிலங்காவின் விவகாரத்துக்கு சரியானதொரு முடிவாக இருக்கும் என நிபுணர்கள் வலியுறுத்தினர்.
சமீபத்தில் இலங்கைத்தீவின் வட புலத்தில் உள்ள பலாலியில் சிறிலங்கா படையினர் மத்தியில் உரையாற்றியிருந்த சிறிலங்காவின் அதிபர் சிறிசேனா, வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரித்திருந்த காட்சிப்பதிவுகளும் அரங்கில் காட்டப்பட்டிருந்தது.
மனித உரிமை விவகாரங்களில் தேர்ச்சி பெற்ற பன்னாட்டு சட்டவாளர்களான Richard J. Rogers, Alexandre Prezanti ஆகியோர் இந்த பக்க நிகழ்வில் பங்காற்றியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.