நியூஸிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மாவும் இந்திய அணியினரும் அதிவேக ஓட்டங்களைக் குவித்து உலக சாதனைகளை பொழிந்து வரலாறு படைத்தனர்.
அப் போட்டியில் நியூஸிலாந்தினால் நிர்ணியக்கப்பட்ட 199 ஓட்டங்களை 13.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட்களால் இந்தியா வெற்றியீட்டி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 – 0 என முன்னிலை அடைந்துள்ளது.
பவர் ப்ளேயில் 118 ஓட்டங்கள்
நியூஸிலாந்துக்கு எதிரான அப் போட்டியில் பவர் ப்ளேயில் இந்தியா 118 ஓட்டங்களைக் குவித்து சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் பவர் ப்ளேயில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணி என்ற சாதனையை நிலைநாட்டியது.
சேர்பியாவுக்கு எதிராக 2021இல் 5.4 ஓவர்களில் ருமேனியா குவித்த 116 ஓட்டங்களே பவர் ப்ளேயில் பெறப்பட்ட முந்தைய அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.
அதிவேக 150 ஓட்டங்கள்
இதே போட்டியில் சகலவிதமான ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் அதி வேக 150 ஓட்டங்களைக் குவித்த அணி என்ற சாதனையை இந்தியா நிலைநாட்டியது. நியூஸிலாந்துக்கு எதிராக 150 ஓட்டங்களைப் பெற இந்தியாவுக்கு வெறும் 7.4 ஓவர்களே தேவைப்பட்டது.
லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிராக 2024இல் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 8.2 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் குவித்த 150 ஓட்டங்களே முந்தைய அதிவேக 150 ஓட்டங்களாக இருந்தது. அப் போட்டியிலும் அபிஷேக் ஷர்மாவின் பங்களிப்பு இருந்தது விசேட அம்சமாகும்.
2.2 ஓவர்களில் 50 ஓட்டங்கள்
இந்தியாவுக்கு இந்தப் போட்டியில் 50 ஓட்டங்களைப் பூர்த்திசெய்ய 2.2 ஓவர்களே தேவைப்பட்டது. சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் ஓர் அணியினால் பெறப்பட்ட இணை அதிவேக 50 ஓட்டங்கள் இதுவாகும். இந்த சாதனையை ஏற்கனவே 3 அணிகள் நிலைநாட்டி இருந்தன.
மேலும் கோல் க்ளடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக 2020 எல்பிஎல் போட்டியில் கலம்போ கிங்ஸ் அணி 2 ஓவர்களில் பெற்ற 50 ஓட்டங்களுக்கு அடுத்ததாக சகல விதமான ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் பெறப்பட்ட இரண்டாவது அதிவேக 50 ஓட்டங்கள் இதுவாகும்.
முதல் ஓவரில் 26 ஓட்டங்கள்
நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியின் முதல் ஓவரில் இந்தியா 26 ஓட்டங்களை விளாசியது. ஐசிசியில் பூரண அங்கத்துவம் பெற்ற நாடு ஒன்றினால் சர்வதேச ரி20 இல் முதல் ஓவரில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2010இல் பெற்ற அவுஸ்திரேலியா பெற்ற 24 ஓட்டங்களே முதல் ஓவரில் பெறப்பட்ட இதற்கு முந்தைய அதிகூடிய ஓட்டங்களாகும்.
11 சதங்கள்
சகல விதமான ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அபிஷேக் ஷர்மா 11 சதங்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் இந்தியா சார்பாக ரி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் குவித்த வீரர் அபிஷேக் ஆவார். விராத் கோஹ்லியை விட அபிஷேக் ஒரு சதம் அதிகமாக பெற்றுள்ளார்.
மேலும், கிறிஸ் கேல் (22 சதங்கள்), பாபர் அஸாம் (13) ஆகிய இருவருக்கு அடுத்ததாக அதிக ரி20 சதங்கள் குவித்த 3ஆவது வீரர் அபிஷேக் ஆவார்.
மிகக் குறைந்த பந்துகளில் 9 சதங்கள்
அபிஷேக் ஷர்மா 20க்கும் குறைவான பந்துகளில் 9 அரைச் சதங்கள் குவித்துள்ளார். வேறு எவரும் ஐந்து தடவைகள் கூட இதனை சாதிக்கவில்லை.














