தமிழ் மொழியின் தொன்மை, உலகளாவிய வரலாறு மற்றும் மொழியியல் சிறப்புகளை ஆய்வுப்பூர்வமாக எடுத்துரைக்கும் அமெரிக்காவில் வாழும் தமிழ் எழுத்தாளர் விக்டர் ராஜலிங்கத்தின் ‘உலகின் மூத்த மொழி தமிழ் மொழி’ நூல், அரங்கம் நிறைந்த தமிழ் ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடந்த சனிக்கிழமையன்று (01.08.2026) யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் வெளியிடப்பட்டது.
மாலை 5.00 மணி முதல் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு திரு. ஆறு திருமுருகன் தலைமை தாங்கினார். கவிஞர் தீபச்செல்வன் வரவேற்புரை நிகழத்தி, நிகழ்வை நெறியாள்கை செய்தார்.
நிகழ்வில் பிரதம விருந்தினராக தவத்திரு வேலன் சுவாமிகள் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் சிதம்பரநாதன், திருமதி பத்மினி சிதம்பரநாதன், பேராசிரியர் சிவலிங்கராஜா உள்ளிட்டோர் உரையாற்றினர்.
தமது உரைகளில் பேச்சாளர்கள், தமிழ் உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாக மட்டுமல்லாது தொடர்ச்சியாக வாழும் செம்மொழியாகவும் திகழ்கின்றது என்பதை வலியுறுத்தினர். தமிழ் மொழியின் வரலாற்று ஆழம், உலக நாகரிக வளர்ச்சியில் அதன் பங்களிப்பு, தொல்லியல் மற்றும் மொழியியல் ஆய்வுகளின் அவசியம் என்பன குறித்தும் அவர்கள் கருத்துரைத்தனர்.
இந்நூல் தமிழ் மொழியின் தொன்மை குறித்த ஆய்வுகளை பொதுமக்களிடம் எளிய வடிவில் கொண்டு செல்லும் முயற்சியாக அமைந்துள்ளதாகவும் பாராட்டினர். மொழிக்காக உயிர்களை அர்ப்பணித்த இனம், இன்று அந்த மொழியை காக்க தவறுவது குறித்து நிகழ்வின் தலைவர் ஆறு திருமுருகன் ஆதங்கம் வெளியிட்டார்.
உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழினம் தமிழ்மொழியை காக்க பல்வெறு முயற்சிகளை எடுத்து வருகின்றமையை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட தவத்திரு வேலன் சுவாமிகள் சுட்டிக்காட்டிப் பேசினார். அத்துடன் தமிழினம் இனப்படுகொலைக்கான நீதி குறித்து காத்திருப்பதையும் நினைவுகூர்ந்தார்.
நூலாசிரியர் விக்டர் ராஜலிங்கம் தனது ஏற்புரையில், தமிழ் மொழியின் வரலாற்றுச் சான்றுகள், உலகின் பல பகுதிகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்கள், மொழியியல் ஒப்பாய்வுகள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்துக்களை ஒருங்கிணைத்து இந்நூலை எழுதியதாகக் குறிப்பிட்டார். தமிழ் மொழியின் பெருமையை உணர்வுபூர்வமாக மட்டுமல்லாது ஆய்வுப்பூர்வமாகவும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டிய தேவை இன்று அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நூலை ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டதுடன், நிகழ்வு முழுவதும் அரங்கம் நிரம்பியிருந்தது குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
தமிழ் மொழியின் தொன்மை, உலகளாவிய வரலாறு மற்றும் அதன் அறிவியல் அடித்தளங்கள் குறித்த புதிய சிந்தனைகளைத் தூண்டும் நூலாக ‘உலகின் மூத்த மொழி தமிழ் மொழி’ அமையும் என்ற நம்பிக்கையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.


















