விரைவில் தேர்தல்…! சிக்கலில் சசிகலாவின் அரசியல் கனவு?- மத்திய அரசின் முடிவும் பாதகமாம்?
தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையில் ஆட்சி யார் கையில் செல்லப்போகின்றது என்கிற ஏக்கம் தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
ஒருபுறத்தில் காபந்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நிரந்தர முதலமைச்சராவதற்கான ஆதரவினை பெருக்கிக் கொண்டிருக்கிறார்.
இன்னொருபுறத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா முதலமைச்சராவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனாலும், அவர் சட்டமன்ற உறுப்பினர்களை ஹோட்டல் ஒன்றில் அடைத்து வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து தப்பி வந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வலுக்கட்டாயமாக தங்களை தடுத்து வைத்திருந்தனர் என்று பொலிஸில் முறையிட்டுள்ளனர்.
இதற்கிடையில் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுப்பதாக அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் அறிவித்ததைத் தொடர்ந்து, அவரை அப்பதவியில் இருந்து நீக்குவதாக பொதுச் செயலாளர் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
எனினும் இதற்கு பதில் அளித்துப் பேசிய மதுசூதனன், தற்காலிக பொதுச் செயலாளராக இருக்கும் சசிகலாவினால் என்னை பதவியில் இருந்து நீக்கமுடியாது. அவருக்கு அந்த அதிகாரமும் இல்லை.
அதிமுகவின் கட்சி விதிமுறைகளின் படி தற்காலிக பொதுச் செயலாளர் ஒருவர் யாரையும் பதவி நீக்கம் செய்ய முடியாது என்று குறிப்பிட்ட அவர், பொதுக்குழுவை கூட்டி தாங்கள் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின்னர், அதிமுக கட்சி தொண்டர்கள், உறுப்பினர்களுக்கிடையில் தேர்தலை நடத்தி பொதுச்செயலாளரைச் தேர்ந்தெடுக்கப்போவதாகவும் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில், மன்னார்க்குடி தரப்பு ஆடிப்போயிருப்பதாகவும், தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதுவாயினும் தேர்தல் நடத்தப்படுமாயின் முடிவுகள் சசிகலாவிற்கு பாதகமான முடிவாகவே இருக்கும் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்கள்.
இதற்கிடையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய அரசாங்கத்தோடு கலந்தாலோசித்து விட்டு தீர்க்கமான முடிவினை அறிவிப்பார் என்றும் அதற்கு தாமதம் ஏற்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்நிலையில் சசிகலாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் முடிவுகள் அடுத்தவாரம் வெளியாகும் என்றும், அது அவருக்கு பாதகமானதாக இருக்கும் என்கிறார்கள் மூத்த ஊடகவியலாளர்கள்.
இந்நிலையில் தான் மத்திய அரசாங்கமும் ஓ.பன்னீர்செல்வத்திற்கான வாய்ப்பை வழங்குவதற்கான முடிவில் இருப்பதாக கூறப்படுகின்றது.
எது எவ்வாறு இருப்பினும் இன்னும் சில தினங்களில் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்கிற முடிவு தெரியவரும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.