வனாத்தவில்லு பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரும் தற்கொலைத் தாக்குதலை நடாத்தியவர்களில் ஒருவர் என தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (23) அலரிமாளிகையில் இடம்பெற்றது. அமைச்சரவை அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த சந்திப்பில், கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
வனாத்தவில்லு பிரதேசத்தில் பெரும் தொகை வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் உயர் மட்ட அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டிருந்தார். இவ்வாறு விடுவிக்கப்பட்டவரும் கடந்த தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சட்டம் ஒழுங்காக முன்னெடுக்கப்படாமையே இந்த சம்பவங்களுக்கு பிரதான காரணம் எனவும் இந்த விடயத்தில் தீர்க்கமான சட்ட நடவடிக்கை எடுப்பதில் இழுபறி நிலைமை ஏற்படுவதில் சந்தேகம் உள்ளதாகவும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.