வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து சமஷ்டி ஆட்சியொன்றை உருவாக்குவது தொடர்பில் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அமெரிக்காவின் உதவியைக் கோரியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான செய்தியொன்றை சிங்கள செய்தித் தளம் ஒன்று பிரசுரித்துள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமெரிக்க காங்கிரஸின் (நாடாளுமன்ற) உறுப்பினர் பில் ஜோன்சன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் ஆகியோர் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்து உரையாடியுள்ளனர்.
இதன்போது வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், காணிவிடுவிப்பு நடவடிக்கைகள், காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினை மற்றும் ஜெனீவா தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரச்சினைகளை சமஷ்டி ஆட்சியொன்றின் ஊடாக இலகுவாகத் தீர்த்து வைக்க முடியும் என்பதன் காரணமாக வடக்கு – கிழக்கை இணைத்து சமஷ்டி ஆட்சியொன்றை உருவாக்க உதவுமாறு அமெரிக்கா முக்கியஸ்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி பதிலொன்றை வழங்க கால அவகாசம் தருமாறு அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்சன் ஆகியோர் தெரிவித்துள்ளனர் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் தொடர்ந்தும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.