அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியமையினால் மீண்டும் தமது போராட்டத்தை முன்னெடுப்பதற்கு வடமாகாண பட்டதாரிகள் தீர்மானித்துள்ளனர்.
தமது வேலைவாய்ப்பு தொடர்பாக வடமாகாண பட்டதாரிகள் இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடி கலந்துரையாடியுள்ளனர்.
அந்த கலந்துரையாடலின் போது, கடந்த வருடம் முன்னெடுத்த தொடர் போராட்டத்தைப் போன்று மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் 143 நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில், வடமாகாண ஆளுநர் ஊடாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்குவதாகவும் அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்தது.
ஆனால், அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில், இதுவரையில் தமக்கான சரியான தீர்வுகள் எட்டப்படாத நிலையில், மீண்டும் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இன்னும் ஓரிரு வாரங்களில் தமக்கான தீர்வினை அரசாங்கம் தர வேண்டும் எனக் கோரியே தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏனெனில் பட்டதாரிகளுக்கான சரியான நியமனங்கள் தராத காரணத்தினால், சமூக பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, நல்லாட்சி அரசாங்கம் தமக்கான தீர்வை விரைந்து வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு வழங்கத் தவறும் பட்சத்தில் மீண்டும் தமது போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமது கோரிக்கையை முன்வைத்த மகஜர் ஒன்றிணையும், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் வடமாகாண பட்டதாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.