ராகுல் தவறவிட்டால் என்ன? இரட்டை சதம் விளாசி இங்கிலாந்தை கலங்கடித்த கருண் நாயர்
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 477 ஓட்டங்களை சேர்த்தது. மொயின் அலி 146 ஓட்டங்கள் சேர்த்தார்.
இதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா பதிலடி கொடுத்து விளையாட ஆரம்பித்தது.
தொடக்க வீரரான லேகேஷ் ராகுல் 199 ஓட்டங்கள் எடுத்திருந்த போது பட்லரிடம் பிடி கொடுத்து இரட்டை சதத்தை தவறவிட்டார்.
நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 391 ஓட்டங்கள் சேர்த்திருந்தது. கருண் நாயர் (71), விஜய் (17) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் தொடர்ந்து விளையாடிய விஜய் 29 ஓட்டங்களில் வெளியேறினார்.
பின்னர் அஸ்வின், கருண் நாயருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர்.
பொறுப்பாக ஆடிய கருண் நாயர் 185 பந்துகளை சந்தித்து சதம் அடித்தார். முதல் சதத்தை அடித்த கருண் நாயர் அதை இரட்டை சதமாக மாற்ற முயற்சி செய்தார்.
167வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கருண் நாயர் 306 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார்.
தன்னுடைய 3வது போட்டியிலேயே முதல் சதத்தை இரட்டை சதமாக மாற்றி சாதனைப் படைத்தார் கருண் நாயர்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிய அஸ்வின் 116 பந்தில் அரைசதம் அடித்தார். அவர் 67 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
தற்போது கருண் நாயர் (242), ஜடேஜா (21) விளையாடி வருகின்றனர். 178 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 665 ஓட்டங்கள் எடுத்துள்ளது.