யாழில் அமைந்துள்ள உலகின் ஒரேயொரு நட்சத்திரக்கோட்டை உங்களுக்கு தெரியுமா?
இலங்கை இராச்சியத்தின் வரலாற்றை 5 வகையாக பிரிக்க முடியும் போர்த்துகேயர் காலம்,ஒல்லாந்தர் காலம், ஆங்கிலேயர் காலம் எனவும் முதலாவது ஈழயுத்தம், இரண்டாவது ஈழ யுத்தம் எனவும் அடையாளப்படுத்தலாம்.
ஆட்சிகள் மாறினாலும் வரலாற்றில் அழிக்க முடியாத கோட்டையாய் பரிணமிக்கின்றது, யாழ் பூமியின் வரலாற்று கதை பேசும் யாழ்ப்பாண கோட்டை.
1621இல் போரத்துகேயர்கள் சங்கிலி செகராச சேகரனை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்றி கொண்டார்கள். இப்போராட்டத்திற்கு பிலிப் தி ஒலிவேறா என்பவன் தலைமை தாங்கினான்.
தற்போது முத்திரைச்சந்தி தேவாலயம் இருக்கும் இடத்தில் ஆரம்பத்தில் காணப்பட்ட நல்லூர் கோவிலை தரைமட்டமாக்கினான்.
மேலும் ஒலிவேறா யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போது பல கிளர்ச்சிகள் நாட்டில் எழத்தொடங்கின. இதனால் தனது பாதுகாப்புக்காக கோட்டையொன்றை உருவாக்கத் தொடங்கினான். அதற்காக கடலோரப் பிரதேசமொன்றையும் தேர்வு செய்தான்.
தனது வசிப்பிடத்திற்காக மாபெரும் கோட்டையை உருவாக்கத்தொடங்கினான். நல்லூர் கோவிலை உடைத்ததனால் பெறப்பட்ட செங்கற்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டன.
பின்னர் ஒல்லாந்தர் காலத்தில் இதற்கான திருத்தப்பபணிகள் மேற்கொள்ளப்பட்டு முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டது.
இன்றளவில் 400 வருட பழமையான வரலாற்றை கொண்ட இலங்கையின் முதல் கோட்டை எனவும் யாழ்ப்பாண கோட்டையே அடையாளப்படுத்தப்படுகின்றது.
4 பக்கமும் ஒரே அளவைக்கொண்டு சதுர வடிவில் அமைக்கப்பட்ட இக்கோட்டை ஒல்லாந்தர் காலத்தில் நட்சத்திர வடிவமைப்பைக் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டது. இதுவே உலகின் முதலாவது நட்சத்திரக்கோட்டை எனவும் அழைக்கப்படுகின்றது.
62 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக் கோட்டையின் வெளிப்புறச் சுவர்கள் ஒவ்வொன்றும் கீழ்ப்பகுதி 40 அடி அகலமும் 30 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
இவ் வெளிப்புறச் சுவர்களை சுற்றி ஆழமான அகழிகள் காணப்படுகிறன. 4 பக்கமும் பாரிய பீரங்கிகளையும் பாதுகாப்பு தளங்களையும் கற்கோபுரங்களையும் சுரங்கங்களையும் சுவடுகளையும் கொண்டதாகவும் இக்கோட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோட்டையின் உட்பகுதியில் நிர்வாக மையங்களும் படைவீரர்களின் இருப்பிடங்களும் ஒல்லாந்த கிறிஸ்தவ ஆலயமும் யாழ்ப்பாணத்தில் ஆளுனர் மாளிகையும் சிறைச்சாலையும் பிற நிர்வாககட்டிடங்களும் காணப்படுகிறன.
அக்காலத்தில் ஒல்லாந்தரின் நிர்வாக மையம் இக்கோட்டையிலேயே முன்னெடுக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.
1973ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது அதன் தலைவர் கைதுசெய்யப்பட்டு இங்கே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. மற்றும் நீதிபதிகள் அரசதலைவர்கள் தங்கும் பாதுகாப்பு மையமாகவும் காணப்பட்டது.
1980 களின் பின் உள்நாட்டுப் போரின் போது இராணுவத் தளமாக காணப்பட்டது.
2009ம் ஆண்டுயுத்த முடிவின் பின் தொல்லியல் திணைக்களம் மற்றும் மரபுரிமைகள் அமைச்சு போன்றவற்றால் பொறுப்பேற்கப்பட்டு நெதர்லாந்து அரசின் நிதியுதவியால்புணர் நிர்மானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
யாழ்ப்பாண கோட்டையை சிறந்தவரலாற்றுச் சுற்றுலாமையமாக மாற்றுவது மற்றும் இலங்கையின் ஒன்பதாவது கலாச்சார சுற்றுலாமையமாக பிரகடனம் செய்து உலக அரங்கில் பிரகடனப்படுத்துவது அரசின் முக்கிய குறிக்கோளாக கொள்ளப்பட்டிருந்தது.
இந்த வகையில் இம்மையத்தின் புனர்நிர்மாணத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய மரபுரிமை நிறுவனம் உள்ளிட்ட பல தரப்பட்ட அமைப்புக்களும் அயராது உழைத்து வருகின்றமையானது, 2018 ஆம் ஆண்டளவில் இக்கோட்டையை இலங்கையின் மரபுரிமையை எடுத்துக்காட்டுவதற்கான ஒரு செயற்திட்டமாகும்.
அந்த வகையில் யாழ்ப்பாண கோட்டை புத்துணர்ச்சி பெற்றால் வரலாற்றில் அழிக்க முடியாத 400 ஆண்டுகளை தாண்டிய உலகின் முதலாவது நட்சத்திரக் கோட்டையாக அமையும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.