‘சிங்கம் 3’, ‘சாமி ஸ்கொயர்’ என வரிசையாக இரண்டு தோல்வி படங்களை அளித்த இயக்குநர் ஹரி, கட்டாயமாக வெற்றிப் படைப்பை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கிய ‘யானை’ அவருக்கு வெற்றியைப் பரிசாக அளித்ததா இல்லையா? என்பதைக் காண்போம்.

கதை
ராமேஸ்வரம் எனும் கடற்கரையோர நகரத்தில் பி ஆர் வி குடும்பம் பல தொழில்களை செய்து, கோடி கணக்கில் லாபத்தை குவித்து, முன்னணி தொழிலதிபராக இருக்கும் குடும்பம். இந்த குடும்பத்தின் தலைவர் ராஜேஷ். இவரது முதல் மனைவியின் மகன்கள் சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், சஞ்சீவ். இரண்டாம் தாரத்து பிள்ளை ரவி எனப்படும் அருண் விஜய். அருண் விஜய் மீது குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பகைமை மற்றும் தீண்டாமை உணர்வுடன் இருந்தாலும், அவர்களது வாரிசுகள் ‘சித்தப்பா சித்தப்பா ரவிப்பா..’ என்று அன்புடன் அழைத்து, பாசம் காட்டுகிறார்கள். இதன் காரணமாக அருண் விஜய், அந்த குடும்பத்தின் அனைவருக்கும் உற்ற பாதுகாவலனாக திகழ்கிறார்.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் சமுத்திரம் என்னும் மீனவ மக்களிடத்தில் செல்வாக்கு பெற்ற குடும்பம் ஒன்று இருக்கிறது. இந்த குடும்பத்தின் வாரிசு ஒருவர் உயிரிழக்கிறார். இதற்கு ரவி ஒரு வகையில் காரணமாக இருக்கிறார். இதன் காரணமாக அந்த குடும்பம், பி ஆர் வி குடும்பத்தை வேரறுக்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சமுத்திரக்கனியின் மகள்= அம்மு அபிராமி, ஒரு இஸ்லாமிய இளைஞனுடன் காதல் வயப்பட்டு, வீட்டுக்கு தெரியாமல் வெளியேறி விடுகிறார். இதற்க அருண் விஜய் தான் காரணம் என சமுத்திரகனி பழி சுமத்துகிறார்.
அருண் விஜய், ஜெப மலர் என்ற கதாபாத்திரத்தில் கிறிஸ்தவ பெண்ணாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கரின் புகைப்படத்தை பார்த்தே காதலிக்கத் தொடங்கி விடுகிறார்.
ரவியின் காதல் என்னவானது? அம்மு அபிராமியின் காதல் என்னவானது? சமுத்திரம் குடும்பத்தினர் பிஆர்வி குடும்பத்தினரை பழிவாங்கினார்களா? இல்லையா? இவர்களை எல்லாம் ரவி பாதுகாத்தாரா? இல்லையா? என்பதுதான் ‘யானை’ படத்தின் கதை. ஹரி இயக்கிய தாமிரபரணி, வேல் என அவருடைய படங்களிலிருந்து கதையை ரீ கிரியேட் செய்து ரசிகர்களுக்கு பரபரப்பான ‘யானை’யாக வழங்கி இருக்கிறார்.
இந்தப் படத்தின் முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு, இரண்டாம் பாதியில் குறைந்து விடுகிறது. ஏனெனில் அடுத்து இப்படித்தான் இருக்கும் என்பதை பாமர பார்வையாளரும் எளிதாக யூகித்து விடமுடிகிறது. இருப்பினும் ரவியாக நடித்திருக்கும் அருண் விஜய் திரைக்கதையை தன் பிரம்மாண்டமான தோளில் அனாயசமாக சுமக்கிறார். அதிலும் சண்டைக் காட்சிகளில் ரசிகர்களை கண்ணிமைக்க விடாமல், பிரமிப்புடன் காண வைக்கிறார். இதற்காக உழைத்த சண்டை பயிற்சி இயக்குநர், ஒளிப்பதிவாளர், பின்னணி இசையமைப்பாளர். இவர்களையெல்லாம் வழிநடத்திய இயக்குநர் ஆகியோருக்கு கைவலிக்க கைகுலுக்கி பாராட்டு தெரிவிக்கலாம்.
நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், கவர்ச்சியே இல்லாமல் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். அருண் விஜய் கன்னத்தில் அறைந்த பிறகும், ‘காதல் குறையவில்லை’ என்று பிரியா சொல்லும் போது, ரசிகர்களின் மனதில் பிரியா சிறகடிக்கிறார்.
யோகி பாபு இன்னொரு நாயகனாகவே படம் முழுவதும் வருகிறார். சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். இருந்தாலும் ஓரிடத்தில் இவருடைய குணச்சித்திர நடிப்பிற்கு ரசிகர்களிடத்தில் கைதட்டல் பலமாக ஒலிக்கிறது.
சென்டிமெண்ட் கலந்த எக்சன் படம் என்றாலும், தன்னுடைய வழக்கமான பாணியிலிருந்து விலகாமல், இன்றைய இளையத்தலைமுறையினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் படத்தை இயக்கியிருப்பதால், ‘யானை’யின் ஓசை சிலருக்கு இனிமையாகவும், சிலருக்கு நாரசமாகவும் ஒலிக்கிறது.
ஹரி சார் இருபது வருடமாக ஒரே பாணியிலான திரைக்கதையை வழங்கி வருகிறீர்கள். யானைகளுக்கு புத்துணர்வு முகாம் இருப்பது போல், நீங்களும் புத்தாக்கப்பயிற்சியை எடுத்து அடுத்தப்படைப்பை உங்களுடைய முத்திரையில்லாமல் வழங்குவீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.
அப்புறம் ஒரு டவுட் சார். சூர்யாவும், நீங்களும் இணைந்த படத்திற்கு அருவா என பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்தில் ஒரு காட்சியில் அருவாவை வைத்து துருப்பிடிச்சி போச்சு பேரிச்சம் பழத்திற்கு போடபோறேன் னு வசனமும், காட்சியும் வெச்சிருக்கீங்களே.. இதுக்கு பின்னாடி ஏதோவது ‘சூர்ய’ அரசியல் இருக்கிறதா..?
தயாரிப்பு : டிம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் : ஹரி
நடிகர்கள் : அருண் விஜய் பிரியா பவானி சங்கர் சமுத்திரக்கனி கே ஜி எஃப் ராமச்சந்திர ராஜு மற்றும் பலர்
யானை – தும்பிக்கை பலம்
மதிப்பீடு = 2,5 / 5