ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடியான நடவடிக்கையாலும், மஹிந்த அணியின் பதிலடியாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆளுகையின் கீழுள்ள வடமத்திய மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் ஆட்டம்காண ஆரம்பித்துள்ளது.
இதனால், மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குரிய நடவடிக்கையில் மஹிந்த அணி தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கிடையில் மைத்திரி தரப்பும் முக்கிய பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றது.
மஹிந்தவுக்குச் சார்பாகச் செயற்பட்டுவந்த வடமத்திய மாகாண அமைச்சர் கே.எச்.நந்தசேனவை தூக்கிவிட்டு, அப்பதவிக்கு மாகாண சபை உறுப்பினர் எச்.ஹேரத் பண்டாவை ஜனாதிபதி நியமித்தார்.
ஆளூநர் முன்னிலையில் ஹேரத் பண்டா பதவிப் பிரமாணமும் செய்துகொண்டார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து – பதிலடி கொடுக்கும் வகையில் மஹிந்தவுக்கு சார்பாகச் செயற்பட்டு வந்த குறித்த மாகாண சபையின் மற்றுமொரு அமைச்சரான எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் தனது அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்குரிய முயற்சியில் இறங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவுக்குச் சார்பாகச் செயற்பட்டு வருபவர்களிடமிருந்து பதவிகளைப் பறித்து வருகின்றார்.
இதன் ஓர் அங்கமாகவே வடமத்திய மாகாண அமைச்சராக இருந்த நந்தசேன அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கு அடுத்தப்படியாக எஸ்.எம்.ரஞ்சித் சமரகோனையும் நீக்குவதே ஜனாதிபதியின் திட்டமாக இருந்தது.
எனினும், ரஞ்சித் தானாக முந்திக்கொண்டு எதிர்ப்பைத் தெரிவிக்கின்றேன் என்ற பாணியில் பதவியைத் துறந்துள்ளார்.
இதனால் வடமத்திய மாகாண சபையின் அரசியல் களம் ஆட்டம்காண ஆரம்பித்துள்ளது. மஹிந்தவின் சகாக்கள் கூட்டாக இணைந்து மைத்திரி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கத் தயாராகி வருகின்றனர்.
“வட மத்திய மாகாண சபையில் மொத்தமாக 33 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் சுயாதீனமாகச் செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.
பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவின் பிரகாரமே மாகாண முதல்வர் தேர்வு இடம்பெறவேண்டும். எனவே, விரைவில் ஆளுநரிடம் மனுவொன்று கையளிக்கப்படும்.
அதன்பின்னர் பொது எதிரணி (மஹிந்த அணி) உறுப்பினர் ஒருவருக்கு முதல்வர் பதவி வழங்குமாறு கோரப்படும். பெரும்பான்மைப்பலம் இருக்கும் பக்கம்தான் ஆட்சி அதிகாரம் இருக்கவேண்டும்.
இதற்கு இடமளிக்கப்படாவிட்டால் மாகாண சபை முற்றுகையிடப்படும்” என்று மஹிந்த அணி உறுப்பினரும் எஸ்.எம்.ரஞ்சித் சமரகோனின் சகோதரரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
எனினும், “ஆட்சி ஆட்டம் காணவில்லை. சூழ்ச்சி உச்சம் பெறுமானால் வடமத்திய மாகாண சபையிலும், தேசிய அரசு அமையும்” என்று ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஆட்சிக்கு அச்சுறுத்தல் வரும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அது முறியடிக்கப்படும் என்பதே அவரின் தர்க்கமாகும்.
வடமத்திய மாகாண சபையானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோட்டையாகவே பார்க்கப்படுகின்றது. அவர் பிறந்த பொலனறுவை மாவட்டமும் இந்த மாகாணத்துக்குள்தான் வருகின்றது.
2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் வடமத்திய மாகாண சபையில் 21ஆசனங்களைக் கைப்பற்றி மஹிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிநடை போட்டது. ஐக்கிய தேசியக் கட்சி 11 ஆசனங்களையும், ஜே.வி.பி. ஓர் ஆசனத்தையும் கைப்பற்றின.
எனினும், மூத்தஉறுப்பினரான பேர்ட்டிக்கு முதல்வர் பதவி வழங்காது தனது சகாவான எஸ்.எம்.ரஞ்சித் சமரகோனுக்கு அந்தப் பதவியை மஹிந்த வழங்கினார்.
இதனால், பேர்ட்டியின் மகனான தற்போதைய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கடும் சீற்றத்தில் இருந்தார். 2015இல் மஹிந்த அரசிலிலிருந்து துமிந்த திஸாநாயக்க வெளியேறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
இந்நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் தனது கோட்டையான வடமத்திய மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி மாற்றங்களைச் செய்தார்.
தனது விசுவாசியான பேசல ஜனரத்னவுக்கு முதல்வர் பதவியைக் கொடுத்தார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மீண்டும் ஆட்சி ஆட்டம்காண ஆரம்பித்துள்ளது.