மெரினா கடற்கரையில் ஜெயலலிதா சமாதி இருப்பது சட்ட விரோதம்: நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை
உச்சநீதிமன்ற தீர்ப்பினால் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் ஜெயலலிதா சமாதிக்கு மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி காலமானார். அதைத் தொடர்ந்து அவரது பூத உடல் மறுநாள் சென்னை மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டது.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்றும் இவர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்ற போதிலும் மரணமடைந்ததால் அவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர், ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பள்ளி பாட புத்தகங்களில் ஜெயலலிதா படங்களை அகற்றவும், மெரினாவில் ஜெயலலிதாவின் சமாதியை அகற்றவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். கிரிமினல் குற்றவாளியை அரசு மரியாதையோடு மெரினாவில் வைத்திருப்பது சட்டவிரோதம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஒரு வாரத்திற்குள் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் அதிகாரம் போராடும் என்றும் தெரிவித்துள்ளனர்.