“சார், என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியும். கலைஞர் மேல விமர்சனம் இருந்தாலும், அவரோட இடத்துக்கு இன்னொருத்தர் வர முடியாதுங்கிற அளவுக்கு மரியாதை வைச்சிருக்கிறவன் நான்,” என்று தொடங்கினார் ஊடகவியலாளரான அந்த நண்பர்.
“நல்லாவே தெரியும். அவரைப்பத்திப் பேசுறப்ப எல்லாம் இதை நீங்க வெளிப்படுத்தியிருக்கீங்க,” என்றேன் நான். இந்த நேரத்தில் கலைஞர் பற்றி ஏதாவது எதிர்மறையாக எழுதி எக்கச்சக்கமாக வாங்கிக்கட்டியிருப்பாரோ என்று நினைத்தேன். அதைக் கேட்கவும் செய்தேன்.
“அப்படியெல்லாம் இல்லை சார். அவருக்கு மெரினாவில் அண்ணா சமாதி வளாகத்திலேயே இடம் ஒதுக்குனது சம்பந்தமா எனக்கு மாற்றுக் கருத்து இருக்கு. அதை உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கிட லாம்னுதான்…”
“சொல்லுங்க…”
“விசயம் கோர்ட்டுக்குப் போனப்பவே எனக்கு இந்தச் சிந்தனை வந்துச்சு. ஆனா திமுக தொண்டர் கள் உணர்ச்சிவசப்பட்டு நிக்கிறப்ப அதைப் விவாதிக்கிறது முறையா இருக்காதுன்னுதான், இப்ப உங்ககிட்ட மட்டும் பேசுறேன். எனக்கு அதிலே உடன்பாடு இல்லை சார். கலைஞருக்கு சிறப்பான மெமோரியல் கட்டணும்கிறதுல எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதுக்கு மெரினா வைப் பயன்படுத்துறது சரியில்லைன்னு நினைக்கிறேன். அவருக்கு மட்டுமில்லை, யாருக்குமே அந்த இடத்தை அப்படிப் பயன்படுத்தக்கூடாதுன்னு நினைக்கிறேன். ஏற்கெனவே அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அங்கே இடம் ஒதுக்குனது கூடத் தப்புதான்னு சொல்றேன். உங்க கருத்து என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் பதிவு பண்ணலாம்னு….”
இந்தக் கருத்து பலருக்கும் இருக்கிறது. அதை வெளிப்படுத்துவதில் தயக்கமும் பலரிடத்தில் இருக்கிறது. சமூக ஊடகங்களில் தங்கள் உடன்பாடின்மையை வெளிப்படுத்தியவர்கள் இருக்கி றார்கள். அவர்களில், கலைஞருடனான அரசியல் வேறுபாடு காரணமாக இதற்கு உடன்படாத வர்கள் உண்டு. வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களில், இயக்கச்சார்பு எதுவும் இல்லாதவர்களில், அவரது ஆளுமையையும் பங்களிப்புகளையும் ஏற்கிறவர்களானாலும், மெரினா போன்றதொரு முக்கியத்துவம் வாய்ந்த இடம் இவ்வாறு தலைவர்களின் நினைவிட மையமாக்கப்பட்டு விடக்கூடாது என்ற கோணத்தில் உடன்படாதவர்களும் உண்டு.முக்கியப் பிரமுகர் முட்டுக்கட்டை?
அந்த இடத்திற்கான கோரிக்கையை ஏற்பது தொடர்பாக அதிமுக நிர்வாகிக்ளுக்கிடையே இரண்டு நிலைப்பாடுகள் வந்தன என்று ‘ஆனந்தவிகடன்’ இணையப்பதிப்புச் செய்திக்கட்டுரை தெரி விக்கிறது. அனுமதிப்பதன் மூலம் ஆட்சிக்குப் பொதுமக்களிடம் நற்பெயர் கிடைக்கும் என்று ஒரு பிரிவினரும், கட்சித் தொண்டர்களின் ஆதரவை முழுமையாகத் தக்கவைக்க திமுக எதிர்ப்பு என்ற அதிமுக பாரம்பரியத்தைத் தொடர வேண்டும் என்று இன்னொரு பிரிவினரும் வற்புறுத்தி னார்களாம்.
அனுமதிப்பதில்லை என்று முதலில் எடுத்த முடிவு மத்திய ஆட்சியாளர்களிடமிருந்து வந்த நிர்ப்பந்தம் எனத் தமிழக ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்து திமுக தலைவர்களுக்குச் சொல்லப் பட்டதாக அந்தச் செய்திக்கட்டுரை தெரிவிக்கிறது.
ஒரு “முக்கியப் பிரமுகர்” தலையிட்டு, கருணாநிதிக்கு அண்ணா நினைவிட வளாகத்தில் இடம் ஒதுக்கினால், அந்த இடமே கடவுள் மறுப்பாளர்களுக்கான இடமாக அடையாளம் பெற்றுவிடும், ஆகவே சட்டக் காரணங்களைச் சொல்லித் தவிர்த்துவிடுமாறு சொன்னதாகவும் அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.
சித்தாந்த அடிப்படையில் அனுமதி மறுக்கச் சொன்னவர் யாராக இருக்கும் என்று நான் முகநூலில் கேட்டிருந்ததற்கு வந்த பதில்களில் பலவும் தற்போது ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளவரைக் குறிப்பிடுவதாக இருக்கின்றன.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி மெரினாவிலேயே இடம் தரப்பட்டது. இறுதி மரியாதை நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசின் சார்பில் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இருவரும் கலந்துகொண்டனர்.
மறுநாள் செய்தியாளர்கள் பேட்டியளித்த ஜெயக்குமார், திமுக முன்வைத்த மற்ற அத்தனை கோரிக்கைகளையும் அரசு ஏற்றது என்றும், மெரினா பிரச்சனையை மு.க.ஸ்டாலின் அரசியலாக்கு கிறார் என்றும் கூறினார்.
ராஜாஜி, காமராஜர், பெரியார், ஜானகி ராமச்சந்திரன் ஆகியோருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க மறுத்தவர் அவர்கள் காலமானபோது முதலமைச்சராக இருந்த கருணாநிதிதான் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

