முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரிடம் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ராஜன் அருட் தந்தையிடம் இவ்வாறு நேற்று இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் போரில் உயிர்நீத்த 500 மக்களின் பெயர்களை உள்ளடக்கி நினைவுத் தூபி அமைக்கத் திட்டமிட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் பெயர்களை நினைவுத் தூபியொன்றில் பொறிக்கும் முனைப்புக்களில் அருட்தந்தை ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நினைவுத் தூபி இன்று நிறுவப்படவிருந்தது என பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றிருந்தது.
தொடர்புடைய செய்தி – புதிய இணைப்பு
முள்ளிவாய்க்கால் : மனதை உலுக்கும் நினைவுச்சின்னம்… தடை போட்ட இலங்கை நீதிமன்றம்!
இலங்கை இனப்படுகொலையைச் சித்தரிக்கும் நினைவுத்தூபி மற்றும் சின்னங்களைத் திறப்பதற்கு அந்நாட்டின் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
இனப்படுகொலைத் தாக்குதலில் சிங்கள இலங்கை அரசப்படையால் தமிழீழ மக்கள் கொல்லப்பட்டதை நினைவு கூரும் வகையில், இறுதித் தாக்குதல் நடந்த கிழக்கு முள்ளிவாய்க்கால், சின்னப்பர் கத்தோலிக்க தேவாலயம் அருகிலுள்ள பகுதியில், இன்று காலையில் நினைவேந்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன .
பாதிரியார் இராஜேந்திரன் எழில்ராஜன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.
நினைவேந்தலுக்காக, படுகொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணை அவரின் கணவர் தூக்கிச்செல்வதையும் அருகில் ஒரு குழந்தை அச்சத்தோடு நின்றுகொண்டிருப்பதையும் சித்தரிக்கும் சிலை ஒன்றும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.
மேலும் சிங்களப்படையின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட 500 கற்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன.
இப்படியான நினைவுச்சின்னத்தை அனுமதிப்பதால் இனப்படுகொலை குறித்து மக்களின் உணர்வுகளைக் கிளறிவிடும் என்பதால், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு பதியப்பட்டது.
வழக்கை விசாரித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம், இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அமைதிக்கும் சமாதானத்துக்கும் இந்நிகழ்வு பங்கம் ஏற்படுத்தும் எனக்கூறி, தடைவிதித்தது.