முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை மீண்டும் புறக்கணித்த சசிகலா!
பிரதமர் மோடி மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் சசிகலா வாழ்த்தேதும் தெரிவிக்காமல் மீண்டும் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவைவிட முதல்வர் பன்னீர்செல்வம் நான்கு வயது மூத்தவர். சசிகலாவுக்கு 62 வயதும் பன்னீர்செல்வத்துக்கு 66 வயதும் ஆகிறது. பொங்கல் பண்டிகையான நேற்று முதல்வர் பன்னீர்செல்வத்தின் பிறந்த நாள். பொங்கல் பண்டிகையோடு இணைந்து பன்னீரின் பிறந்த நாள் வருவதால், அதை குடும்பசகிதம் சிறப்பாகக் கொண்டாடுவது பன்னீர்செல்வம் குடும்பத்தினரின் வழக்கம்.
முன்னாள் முதல்வரும் பன்னீர்செல்வத்தின் அரசியல் குருநாதருமான ஜெயலலிதா மறைந்து 40 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், தன் பிறந்த நாளையோ, பொங்கல் விழாவையோ குடும்பசகிதம் பன்னீர்செல்வம் கொண்டாடவில்லை.
நேற்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்துக் கூறினார். பின்னர், பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக் கூறினார்.
ஆனால் ஆளும் அதிமுக முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வாழ்த்துக் கூறவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வாழ்த்திய பின்னரும்கூட சசிகலாவிடமிருந்து அறிக்கை வரவில்லை.
பிரதமர் மோடி வாழ்த்துச் சொன்னபிறகுதான் பன்னீரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக் கூறினாராம் சசிகலா.