மாமனிதர் எஸ்.ஜீ. சாந்தனுக்கு கிளிநொச்சியில் அலையெனத் திரண்ட மக்கள்
ஈழத்தின் சிறந்த பாடகரும், நாடகக் கலைஞர் எஸ்.ஜே.சாந்தனின் இறுதிக் கிரியைகள் மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்றைய தினம் மிகவும் உணர்வெழுச்சியாக நடைபெற்றதுடன் பெருமளவான மக்கள் அலையெனத் திரண்டிருந்தனர்.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் அளவில் உயிரிழந்திருந்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிக் கிளையின் ஏற்பாட்டில் மாமனிதர் சாந்தன் அவர்களது இல்லத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் அவரது புனித உடல் ஏ9 வீதி வழியாக பான்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதைகளுடன் எடுத்து வரப்பட்டு கரைச்சிப் பிரதேசசபை வளாகத்தில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டு இறுதி அஞ்சலிக்கூட்டம் இடம்பெற்றது.
பெருமளவான தமிழின உணர்வாளர்களான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், கல்விச்சமூகத்தினர் என பலரும் வடக்குக்கிழக்கு, மலையகம், கொழும்பு என நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருமளவில் கலந்துகொண்டு இரங்கல் உரைகளையும் மலர் வணக்க அஞ்சலிகளையும் நிகழ்த்தியிருந்தனர்.
இறுதி அஞ்சலி நிகழ்வின் போது தமிழீழ எழுச்சிப் பாடகர் மாமனிதர் சாந்தன் அவர்களால் பாடப்பட்ட எழுச்சிப் பாடல்களும் சாந்தன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு கலைஞர்களால் பாடப்பட்ட பாடல்களும் இசைக்கப்பட்டன.
இதன்போது அங்கு கூடியிருந்தவர்களது விழிகள் கண்ணீர் சொரிந்து அஞ்சலி செலுத்தியதை அவதானிக்க முடிந்தது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் வட,கிழக்கு, மலையகம் உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், வேதுகுமார், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபைகளின் உறுப்பினர்கள் கலைஞர்கள், பெருமளவான மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது இறுதி வணக்க அஞ்சலிகளைச் செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, இந்த இறுதி நிகழ்வினை நடத்துவதில் இராணுவத்தினர் தமது கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததோடு, பல்வேறு இடையூறுகளையும் விளைவித்திருந்தது. எனினும், இதற்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி கிளை இறுதி நிகழ்வுகளை முன்னின்று செயற்படுத்தி முடித்திருக்கிறமை குறிப்பிடத்தக்கது.