பிரித்தானியாவில் மான்செஸ்டரில் உள்ள மைதானத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 22 பேர் பலியாகினர் மற்றும் 119-பேர் காயமடைந்தனர்.
இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட நபர் Salman Abedi(22) என்றும் இவனது குடும்பம் லிபியாவில் இருந்து அகதியாக பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்துள்ளனர் எனவும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அவனது சகோதரர்களை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 5-பேரை கைது செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இது தொடர்பாக Salman Abedi-இன் நண்பர்கள் இருவரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்கள் Salman Abedi தீவிரவாதத்தை ஆதரித்ததாகவும், தற்கொலை படை தாக்குதல் நடத்துவது சரி தான் என்று அவர்களிடம் அவன் சில வருடங்களுக்கு முன் பேசியதாகவும், இதனால் அவன் இந்த செயலை செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
மேலும் Salman Abedi ஐந்து வருடங்களுக்கு முன் பள்ளியில் இருந்து வெளியேறிய பின்பு புகைபிடிக்க ஆரம்பித்ததாகவும், அதைத் தொடர்ந்து தெற்கு மான்செஸ்டரில் உள்ள ஒரு கும்பலுடன் அவன் பழகியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து பொலிசாரிடம் கேட்ட போது, எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தால், பிரித்தானியாவின் தலைநகர் லண்டனிற்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் ஒரு தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.