மத்திய கலிஃபோர்னிய காட்டுத் தீ: 14,000 ஏக்கர் நிலப்பகுதி தீக்கிரை
மத்திய கலிஃபோர்னியாவின் அல்டசியரா பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயினால், 14 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
அத்தோடு, நேற்று (சனிக்கிழமை) மாத்திரம், தீக்கிரையான மொத்த நிலப்பகுதியில் 6 சதவீதமான பகுதியை காட்டுத் தீ ஆக்கிரமித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ந்தும் குறித்த பகுதியில் காட்டுத் தீ பரவி வருவதனால் சில வீதிகள் மூடப்பட்டுள்ள அதேவேளை, எந்தவொரு சொத்துக்கும் சேதமேற்பட்டுள்ளதாக இதுவரை அறியக்கிடைக்கவில்லை என பிராந்திய தீயணைப்புப் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆயினும், குறித்த பகுதியில் உள்ள வீடுகள் சில காட்டுத் தீயினால் தீக்கிரையாகியுள்ளதாக அமெரிக்க வன இலாகா திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை தென் கலிஃபோர்னியாவில் Blue Cut fire என அழைக்கப்படும் காட்டுத் தீ தொடர்ந்தும் பரவி வருவதோடு, இதுவரை 37 ஆயிரம் ஏக்கர்களை நாசம் செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அத்துடன் 105 வீடுகள் மற்றும் 213 கட்டடங்கள் என்பனவும் அழிவடைந்துள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்காவின் 12 மாநிலங்களில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பல்வேறு காட்டுத் தீ பரவல் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.