ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு தகுதி பெற முடியும் இலங்கைக்கு முழு நம்பிக்கை இருப்பதாக துடுப்பாட்ட வீராங்கனை ஹர்ஷித்தா சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபோர்ட் விளையாட்டரங்கில் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் ஹர்ஷித்தா இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்துக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை மிகப் பெரிய வெற்றியை ஈட்டும் அதேவேளை, நாளை நடைபெறவுள்ள போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளும் நியூஸிலாந்தும் முறையே அயர்லாந்திடமும் இங்கிலாந்திடமும் மிக மோசமான தோல்விகளைத் தழுவினால் இலங்கை அரை இறுதிக்கு செல்லக்கூடியதாக இருக்கும்.
இலங்கை செய்திகள்

ஆனால், அதிசயம் நிகழ்ந்தாலன்றி இலங்கைக்கு சாதகமாக எதுவும் நிகழும் என எதிர்பார்க்க முடியாது.
இலங்கைக்கு மிகப் பெரிய நிகர ஓட்ட வேகம் தேவைப்படுவதை அறிந்துள்ளதாகவும் அதற்கேற்ற திட்டங்களுடன் களம் இறங்கவுள்ளதாகவும் ஹர்ஷித்தா தெரிவித்தார்.
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அணித் தலைவி சமரி அத்தபத்து ஆட்டம் இழக்காமல் சதம் குவித்து இலங்கை அணிக்கு மிகப் பெரிய வெற்றியை ஈட்டிக்கொடுத்திருந்தார்.
அவரிடம் இருந்து அதேபோன்றதொரு திறமையான ஆட்டம் வெளிப்படும் என இலங்கை அணியினர் நம்புகின்றனர்.
ஆனால், எல்லா வீராங்கனைகளினதும் பங்களிப்பு அவசியம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

‘அவர் (சமரி) ஒரு மகத்தான வீராங்கனை. இலங்கை கிரிக்கெட்டில் அவர் ஒரு வாழும் கிரிக்கெட் விற்பன்னர். அவர் மிகத் திறமையாக கிரிக்கெட் விளையாடுகிறார். அவர் எங்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். அவர் எப்போதும் தனது சொந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்வார். அவருடன் விளையாடுவது மிகப் பெரிய கௌரவமாகும்’ என ஹர்ஷித்தா தெரிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றிபெறத் தவறிய இலங்கை இந்த வருடம் முன்னேற்றம் அடைந்த அணியாக இருக்கிறது என உணர்வதாக ஹர்ஷித்தா தெரிவித்தார்.
ஐசிசி மகளிர் ரி20 கிரிக்கெட் தரவரிசையில் தற்போது 7ஆம் இடத்தில் உள்ள இலங்கை, தனது கடைசிப் போட்டியில் ஸ்கொட்லாந்தை இன்று மாலை எதிர்த்தாடவுள்ளது.
மறுபுறத்தில் ஸ்கொட்லாந்து தனது இரண்டாவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் திறமையை வெளிப்படுத்தியுள்ளது.
அயர்லாந்துக்கு எதிராக தனது முதலாவது வெற்றியை ஈட்டிய ஸ்கொட்லாந்து, முன்னாள் சம்பியன் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் நடப்பு சம்பியன் நியூஸிலாந்துக்கும் பலத்த சவால் விடுத்திருந்தது.
இந் நிலையில் தரவரிசையில் 11ஆம் இடத்திலுள்ள ஸ்கொட்லாந்தை இலகுவாக கொள்ள முடியாது என்பதை ஹர்ஷித்தா அறியாமல் இல்லை.

‘இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் நாங்கள் திறமையாக விளையாடவில்லை. ஆனால், இந்த வருடம் நாங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளோம்.. நியூஸிலாந்துக்கு எதிராக நாங்கள் வெற்றிபெற்றோம். இது இலங்கை கிரிக்கெட்டில் ஒரு பெரிய வெற்றியாகும். அதேவேளை, ஸ்கொட்லாந்து வெகுவாக முன்னேறிவரும் அணிகளில் ஒன்றாகும். எனவே அந்த அணி எங்களுக்கு மிகப் பெரிய சவாலாகும்’ என்றார் அவர்.
இலங்கை செய்திகள்
உலகக் கிண்ணப் போட்டியில் எந்தவொரு அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது எனவும் நாங்கள் ஒவ்வொன்றாக குறிவைத்து விளையாடவுள்ளோம் எனவும் ஹர்ஷித்தா கூறினார்.
முதலில் வெற்றிபெறுவதை உறுதிசெய்யவேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், அடுத்ததாக சிறந்த நிகர ஓட்ட வேகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.
அரை இறுதிக்கு தகுதி பெறுவதற்கு இலங்கை கடுமையாக முயற்சிக்க உள்ள அதேவேளை, ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் 2028க்கு தகுதிபெறுவதை உறுதிசெய்ய ஸ்கொட்லாந்து முயற்சிக்கவுள்ளது.












