இந்தியாவின் மர்காஓ ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (28) மாலை நடைபெற்ற மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் பி குழு போட்டியில் இலங்கையை 4 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பூட்டான் வீழ்த்தியது.

பூட்டான் சார்பாக பேமா சோடென் ஷெரிங், ஹெட் – ட்ரிக் முறையில் கோல்களைப் புகுத்தி அசத்தினார்.
போட்டியின் முதலாவது பகுதியில் இரண்டு அணிகளும் ஒரளவு சம அளவில் மோதிக்கொண்டன.
எவ்வாறாயினும் போட்டியின் 21ஆவது நிமிடத்தில் பேமா சோடென் ஷெரிங் முதலாவது கோலைப் போட்டு பூட்டானை முன்னிலையில் இட்டார்.
அதன் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த இலங்கை முயற்சித்த போதிலும் அது கைகூடவில்லை.

இடைவேளையின்போது பூட்டான் 1 – 0 என்ற கோல் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளையின் பின்னர் இலங்கை அணியினரை திக்குமுக்காடவைத்த பூட்டான் அணியினர் மேலும் 3 கோல்களைப் போட்டு அபார வெற்றியீட்டினர்.

டெக்கி லாஸோம் 54ஆவது நிமிடத்திலும் பேமா சோடென் ஷெரிங் 80ஆவது மற்றும் 83ஆவது நிமிடங்களிலும் கோல்களைப் புகுத்தினர்.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததால் இலங்கை அரை இறுதி வாய்ப்பை இழப்பது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.












