பெரு நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு
பெருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் போது உயிரிழந்த மேலுமொருவரின் சடலம் நேற்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெருவில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட நிலநடுத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதுடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 15ஐ எட்டும் என்று தெரிகின்றது.
உயிரிழந்த 4 பேரில் அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அமெரிக்க நிலவியல் ஆய்வு மைய (யு.எஸ்.ஜி.எஸ்) அதிகாரிகள் தெரிவித்துள்ள கருத்துக்களின் பிரகாரம், நிலநடுககம் 5.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும், அதன் பின்னர் நேற்று (திங்கட்கிழமை) வரை 4 மிதமான நிலநடுக்கங்கள் குறித்த பகுதியில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், பெருவின் தேசிய சிவில் பாதுகாப்பு நிறுவனம் நிலநடுக்கத்தால் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ள வீதிகளை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட கணக்கெடுப்பின் மூலம், பல நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டடங்கள் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.