அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சருக்கு வவுனியா மாவட்ட உறுப்பினரான ஜி.ரி.லிங்கநாதன் கடிதம் அனுப்பியுள்ளார். இருப்பினும் அவரை அமைச்சராக நியமிப் பதற்கு அவ ரது கட்சியான புளொட்டினுள் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண அமைச்சரவை கடந்த ஜூன் மாதம் மாற்றியமைக்கப்படும்போது அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஜி.ரி.லிங்கநாதனிடம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியிருந்தார். அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்திருந்தார்.
”வடக்கு மாகாண விவசாய அமைச்சராக இருந்த பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்களை மாகாண சபையில் முன்வைத்திருந்தவன் என்ற அடிப்படையில்இ அமைச்சுப் பதவியை ஏற்றால் பதவிக்காகத்தான் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தேன் என்று சொல்லப்படும் என்பதால் பதவி ஏற்க மாட்டேன்” என்று அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குத் திடீரென சில தினங்களுக்கு முன்னர் மின்னஞ்சல் அனுப்பியுள்ள ஜி.ரி.லிங்கநாதன் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஏற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ”முன்னர் அமைச்சுப் பதவி கோரிய போது மாவட்டத்தில் வேறு ஒருவர் (அமைச்சர் சத்தியலிங்கம்) அமைச்சராக இருந்தார். இப்போது அவர் அமைச்சராக இல்லை. எனது ஆதரவாளர்களும் அமைச்சுப் பதவியை ஏற்கச் சொல்வதால் அமைச்சுப் பதவி வழங்கினால் ஏற்றுக் கொள்வேன்” என்று அவர் தனது மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
”லிங்கநாதன் அமைச்சுப் பதவி வேண்டாம் என்று கூறியிருந்தார். பத்திரிகையில் படித்தேன். முதலமைச்சரும் கூறியிருந்தார். அவர் கொள்கை அடிப்படையில் அந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தார். அவருக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு நான் கோரினால் கொள்கையில்லாதவனாக நான் ஆகிவிடுவேன்” என்று புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் உதயனிடம் தெரிவித்தார்.

