பிலிப்பைன்ஸின் லூஸொன் தீவை தாக்கிய சக்திமிக்க நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நேரப்படி நேற்று மாலை 5.10 மணியளவில் 6.3 அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவானது. சேத விபரங்கள் தொடர்பாக உடனடி தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் தற்போது 8 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளார்க் சர்வதேச விமான நிலையம் பாரிய சேதங்களுக்கு உள்ளான அதேவேளை, இரண்டு கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன. குறிப்பாக பம்பன்ஸ் மாகாணத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.
தலைநகர் மணிலாவின் வடமேற்கு பகுதியிலுள்ள குறித்த மாகாணமே அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. அங்கு சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக மாகாண ஆளுநர் லிலியா பினெடா தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக பல அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீடுகளையும் கட்டிடங்களையும் விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தமை குறிப்பிடத்தக்கது.