பிரான்சின் புதிய ஜனாதிபதியாக இமானுவல் மக்றோன் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது கனடாவுடனான வர்த்தக உடன்பாட்டில் முன்னேற்றமான விளைவை ஏற்படுத்தும் என பிரான்சுக்கான கனேடிய தூதர் லாரன்ஸ் கேனோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மொன்றியலில் இடம்பெற்ற வெளிநாடுகளுடான உறவுகள் தொடர்பான மாநாடு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கனடா மிகவும் பிரயத்தனம் எடுத்து மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக உடன்பாட்டுக்கு இமானுவல் மக்றோன் பலத்த ஆதரவினை வெளியிட்டு வந்திருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டியதுடன், கனடாவுக்கும் பிரான்சுக்கும் இடையேயான பொருளாதார அத்திவாரம் கேள்விக்கு உட்படுத்தப்பட மாட்டாது என்பதனை மக்றோனின் தெரிவு உறுதிப்படுத்துவதாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வலதுசாரி கொள்கைகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அங்கு அதிகரித்துள்ள ஆதரவு குறித்தும் கவலை வெளிப்படுத்திய பிரான்சுக்கான கனேடிய தூதர், இந்த ஜனாதிபதி தேர்தலில் இமானுவல் மக்றோனை எதிர்த்துப் போட்டியிட்ட வலதுசாரி வேட்பாளரான மரீன் லா பென் 34 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.