பாலியல் புகாரில் சிக்கிய கனேடிய ராணுவ வீரர்
கனேடிய ராணுவ வீரர் ஒருவர் உடன் பணியாற்றும் பெண் ராணுவ வீரரை பாலியல் பலாத்காரம் செய்துள்ள புகாரை அடுத்து அவர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
கனடாவில் Petawawa பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் Simon Cadieux என்பவர்தான் பாலியல் வன்புணர்வு வழக்கில் சிக்கியவர். இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராணுவ வீரர் சைமன் கூட்டு பணியாளர் ஆதரவு படையில் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இந்த படையானது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூட்டுப் பயிற்சி தொடர்பாக ஜமைக்கா சென்றுள்ளது. அங்கு வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.பாதிக்கப்பட்ட பெண் ராணுவ வீரரும் இதே படையில் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இந்த விவகாரத்தில் சைமன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ராணுவ வீரர் மீது வழக்கு பதிந்துள்ளதால் ஒட்டுமொத்த அமைப்பு மீதும் மரியாதை, ஆரோக்கியமான தொழில்முறை சூழல் உருவாக இது உதவும் என உயர் ராணுவ அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.கனேடிய ராணுவத்தின் மீது எழுந்த பல்வேறு பாலியல் புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் தவறியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்து வந்தது.
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கனேடிய ராணுவத்தில் பெண்களின் நிலை குறித்து கடுமையாக சாடியிருந்தார்.இதனிடையே பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஜெனரல் ஜோனாதன் வென்ஸ், ராணுவத்தில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் பலியல் தாக்குதல் உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.