பல்வேறு திருப்பங்களுடன் கண்ணீர் மல்க முதல் முறையாக பேட்டி அளித்த சசிகலா
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சசிகலா நடராஜன் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தான் மிரட்டப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டு குறித்து அவர் கூறியதாவது, சட்டமன்ற கூட்டம் நடைபெற்ற அன்று பன்னீர் செல்வம் என்னுடன் நன்றாகத்தான் பேசிக்கொண்டிருந்தார்.
ஆனால், எதற்காக இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தினார் என்பது புரியவில்லை. அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது போகப்போக அனைவருக்கும் தெரியும்.
தமிழகத்தில் முதல்வராக ஆட்சி அமைப்பதற்கு நீங்கள் உரிமை கோரினீர்களா? என்ற கேள்விக்கு, கூட்டத்தின்போது சட்டமன்ற எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் என்னை சட்டமன்ற தலைவராக தெரிவு செய்தார்கள். இதற்கான அனைத்து சாட்சியங்களும் என்னிடம் இருக்கிறது.
இதனைத்தொடர்ந்து ஆளுநர் அவர்களை சந்திக்க சென்றபோது, அவர் ஊட்டியில் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அந்த ஒப்புதல் கடிதம் பேக்ஸ் வழியாக அவருக்கு அனுப்பப்பட்டது.
ஜனநாயகத்தை ஆளுநர் பாதுகாப்பார் என கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
பன்னீர் செல்வம் எதற்காக இவ்வாறு மாறினார்?
நான்கு நாட்கள் சட்டமன்ற கூட்ட தொடர் நடைபெற்றபோது, திமுக துரைமுருகன் அவர்கள் பன்னீர் செல்வம் முதல்வராக பணியை தொடர்வதற்கு திமுக ஆதரவு தருகிறது என கூறினார்.
ஆனால், பெரும்பான்மை ஓட்டுவங்கியை கொண்ட ஆளும் கட்சியான அதிமுகவுக்கு, எதிர்கட்சியான திமுகவின் ஆதரவு தேவையில்லை. எனவே இந்த பதிலைத்தான் பன்னீர் செல்வம் கூறியிருக்க வேண்டும். ஆனால் பன்னீர் செல்வம் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த காரணத்தினால் தான் என்னுடைய கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் என்னை முதல்வராக்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள்.
எதற்காக எதிர்கட்சியை குற்றம்சாட்டினீர்கள்?
ஸ்டாலின் அவர்களின் போக்கே இதற்கான பதிலை கொடுக்கிறது. அவர்கள் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளிக்கிறோம் என அடிக்கடி கூறிவருகிறார்கள். முதலில் அவர்கள் அதிமுக கட்சியை சேர்ந்த முதல்வராகவே பன்னீர் செல்வத்தை பார்க்கவில்லை.
மேலும், சட்டமன்றத்தில் ஒரு முதலமைச்சர் எவ்வாறு நடந்துகொள்வாரோ, அதனை பன்னீர் செல்வம் கடைபிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அப்போது, நீங்கள் முதல்வரானால் எப்படி நடந்துகொள்வீர்கள் என நேர்காணல் நடத்தியவர் எழுப்பிய கேள்விக்கு, அம்மா எவ்வாறு நடந்துகொள்வாரா அதே போன்றுதான் நான் நடந்துகொள்வேன் என கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை? அம்மாவை சந்திக்க முடியாதது குறித்து பன்னீர் செல்வத்தின் குற்றச்சாட்டு?
அம்மாவோடு 33 ஆண்டுகள் இருந்துள்ளேன். அவரை எப்படி பார்த்துக்கொள்வேன் என்பது எனது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும். ஆனால் இந்த நேரத்தில் பன்னீர் செல்வ இப்படி கூறுவது வேண்டுமென்றே திட்டமிட்டு கூறப்படும் பொய்.
75 நாட்களும் அம்மாவை எப்படி பார்த்துக்கொண்டேன் என்பது அங்கு பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தெரியும். வெளியில் சொல்வதை பற்றி நான் கவலைப்படுவதில்லை. என் மனசாட்சிக்கு அனைத்தும் தெரியும்.
அம்மாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என பன்னீர் செல்வம் கூறியது வருத்தம் அளிக்கிறது. பன்னீர் செல்வம் ஒரு பச்சை துரோகி.
அம்மா அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஒரு திறந்த புத்தகம். அவர் உடல்நலம் தேறிவந்தபோது மருத்துவமனையில் அனுமான் தொடர் மற்றும் பழைய பாடல்களை பார்ப்பார். இவை அனைத்தும் பன்னீர் செல்வத்திற்கும் தெரியும்.
அம்மாவை மருத்துவமனையில் தாமதமாக அனுமதித்த குற்றச்சாட்டு குறித்து?
இல்லை. இது ஒரு தவறான செய்தி. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். மிகச்சரியான நேரத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள் என மருத்துவர்கள் கூறினார்கள்.
இதுதொடர்பான எந்த ஒரு விசாரணைக்கும் நான் தயார் என கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து?
நீதிமன்றத்தை மதிக்கிறேன். ஒரு கருத்து நிலுவையில் இருக்கும்போது அதுகுறித்து கருத்து தெரிவிப்பது தவறு.
தமிழகத்தின் முதல்வர் பதவி?
நிச்சயமாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பேன், அம்மாவின் ஆசியோடு அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று நினைத்தாரோ அதன் வழியில் நான் செயல்படுவேன் என கூறியுள்ளார்.