பன்னீர் செல்வத்துக்கு மிரட்டல்? திடீரென எம்பிக்கள் கூட்டத்துக்கு சசிகலா அழைப்பு விடுத்ததற்கு காரணம் என்ன?
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் முக்கிய முடிவுகளை சசிகலா தான் எடுத்து வந்தார். அவரே அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இதனால் பலரும் அதிமுக தற்போது சசிகலாவின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்று கூறிவந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தப்பட்டது. இது உலக அளவில் பேசப்பட்டது.
அப்போது சசிகலா என்ற நபர் ஒருவர் இருக்கிறார் என்பதையே அனைவரும் மறந்து விட்டனர். அனைவரும் பன்னீர் செல்வத்தின் பெயரையே உச்சரித்த படி இருந்தனர். இதனால் அவர் தானும் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக
முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக டெல்லி சென்ற போது சசிகலாவும் போட்டிக்கு அறிக்கை விட்டு குறுக்குசால் ஓட்டினார்.
கடந்த 15 நாட்களாக என்ன செய்வது என தெரியாமல் சசிகலா ஒருவித விரக்தி நிலையில்தான் இருந்துவந்தார். அதுவும் எனக்கே முதல்வர் பதவி என கணவர் நடராஜன் மல்லுக்கட்ட கடும் விரக்தியடைந்தவராக இருந்தார் சசிகலா.
இந்த நிலையில் குடியரசு தினத்துக்கு விவிஐபி பாஸ் சசிகலாவுக்கு மட்டும் என அரசு தரப்பில் சொல்லப்பட்டுவிட்டது; இதை சகித்துக் கொள்ள முடியாத மன்னார்குடி கோஷ்டி சசிகலாவையும் போகவிடவில்லை என்று கூறப்படுகிறது.
குடியரசு தின விழாவின் போது கூட முதல்வர் பன்னீர் செல்வம் தொடர்பான புகைப்படங்கள் தான் செய்திகளில் வெளிவந்துள்ளன.
இப்படியே போனால் கட்சிக்காரர்கள் கூட மறந்துவிடுவார்கள் என நினைத்துதான் திடீரென அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், எம்பிக்கள் கூட்டத்தை கூட்ட சொன்னாராம் சசிகலா. இப்படி கூட்டுவதன் மூலம் தமக்கு போட்டியாக இருக்கும் பன்னீர்செல்வத்துக்கு குடைச்சல் கொடுத்தது மாதிரி இருக்கும் என்பது தான் மன்னார்குடியின் முடிவு என்று கூறப்படுகிறது.
பொதுவாக சட்டசபை கூட்டத் தொடருக்கு முதல் நாளோ அல்லது அன்று காலையோ கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவது தான் வழக்கம்.
ஆனால் சட்டசபை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் சசிகலா. இப்படி செய்தால் கட்சி தம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது.
தன்னிச்சையாக செயல்பட நினைத்தால் தூக்கியடிக்கப்படுவீர் என முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மிரட்டல் விடுத்தது போலவும் இருக்கும் என்பதும் மன்னார்குடி கணக்கு என்று கூறப்படுகிறது.