டாக்கா தேசிய விளையாட்டரங்கில் சனிக்கிழமை (14) இரவு நடைபெற்ற தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வரவேற்பு நாடான பங்ளாதேஷை 1 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி அடையச் செய்தது.
இதன் மூலம் SAFF சம்பியன்ஷிப் வரலாற்றில் பாகிஸ்தான் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. அத்துடன் 23 வருடங்களுக்குப் பின்னர் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரிக்கும் பங்களாதேஷின் கனவும் கலைந்துபோனது.
இந்தப் போட்டி முடிவை அடுத்து செவ்வாய்க்கிழமை (17) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் எதிர்த்தாடவுள்ளது.
இந்தத் தோல்விiயைத் தாங்க முடியாத பங்களாதேஷ் ரசிகர்கள் கையில் அகப்பட்ட பொருட்களை மைதானத்திற்குள் எறிந்து தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். எனினும் மைதானத்திற்குள் இருந்த போலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.
ஆரம்பம் முதல் கடைசிவரை பரபரப்பையும் விறுவிறுப்பையும் தோற்றுவித்த இப் போட்டியில் ராறு ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தினர்.
அதேவேளை, இரண்டு அணியினரும் கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டனர்.
இடைவேளைக்கு முன்னர் இரண்டு அணியினரும் கோல் போட எடுத்த தலா ஒரு முயற்சி கோல் கம்பத்தில் பட்டு நூலிழையில் தவிறயது.
இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் இரண்டு அணி வீரர்களும் சளைக்காமல் விளையாடி கோல் போடுவதற்கு முயற்சித்தனர். ஆனால் பாகிஸ்தான், பங்களாதேஷ் கோல்காப்பாளர்கள் அலாதியாக செயல்பட்டு அவற்றைத் தடுத்தனர்.
எவ்வாறாயினும் போட்டியின் 86ஆவது நிமிடத்தில் அப்துல் அர்ஷாத் கோல் போட்டு பாகிஸ்தானை வெற்றி அடையச் செய்தார்.















