முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உத்தியோகத்தர்கள் பக்கச்சார்பாக நடக்கின்றனர். அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வடக்கு முதலமைச்ச ரிடம் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் சென்றார். அங்கு கடற்றொழிலாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தார். அதன்போதே கடற்றொழிலாளர்களால் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நான்கு உத்தியோகத்தர்களே உள்ளனர். அவர்கள் சுயநலப் போக்கில் செயற்படுகின்றனர். அதிலும் ஒரு அதிகாரி தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுகின்றார். வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு பணியாற்றுகின்றார். இவர்களால் மீனவர்களுக்கு எந்த உதவிகளும் இல்லை. முல்லைத்தீவு நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வடக்கு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
வடக்கு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்ததுடன், அது தொடர்பில் ஆராயப்படும் என்றும் தெரிவித்தார் என்று கூறப்பட்டது.
சட்டவிரோதக் கடற்றொழில் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று அறிந்து கொள்வதற்காக முல்லைத்தீவுக் கடற்றொழிலாளர் சங்களைச் சந்தித்துப் பேசினேன். வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்களால் பிரதேச மீனவர்களுக்குப் பல பிரச்சிளைகள் ஏற்படுகின்றன என்று அறிய முடிகின்றது என்று வடக்கு முதலமைச்சர் தெரிவித்தார்.
சிலர் பாரம்பரியமாக இந்தப் பிரதேசத்தில் தொழில் செய்கின்றனர். அவர்களிலும் பார்க்க அதிகமானவர்கள் இப்போது உள்நுழைகின்றனர் என்பது பிரதேச மீனவர்களின் குறையாக உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டத்துக்கு முரணாக மீன்பிடித் தொழில் செய்கின்றனர் என்றும், மீன் வளம் விரைவாகக் குறைகின்றது என்றும் மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எமது மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கொழும்பு மீன்பிடி அமைச்சருடன் பேச வேண்டிய தேவை உள்ளது. வடக்கு மாகாண மீன்பிடித் திணைக்களத்தின் அலுவலகம் இங்கு இல்லாததும் சிரமத்தைத் தருகின்றது என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மத்திய அரசுடன் பேசி ஒரு முடிவுக்கு வரவுள்ளோம். எதிர்வரும் 12ஆம் திகதி கொழும்பு அமைச்சர் இங்கு வரவுள்ளார். எமது கருத்துக்களை அவருக்குத் தெரியப்படுத்தவுள்ளேன். அவர்களுடன் பேசிய பின்னர்தான் தீர்க்கமான முடிவுக்கு வர முடியும் என்றும் வடக்கு முதலமைச்சர் தெரிவித்தார்.
கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சர் க.சிவனேசன்,
ஏனைய அனைத்துத் திணைக்களத்துக்கும் ஆளணி உள்ளது. கடற்றொழில் திணைக்களத்துக்கு மட்டும் ஆளணி இல்லை. இப்போது அதை உருவாக்கி வருகின்றோம்.
முன்னர் என்ன நடந்தது என்பதைப் பற்றி நான் கூற வரவில்லை. ஆளணி உருவாக்குதற்காக நியதிச் சட்டம் இயற்றப்பட்டு, மொழிபெயர்ப்புக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தபோது திணைக்களத்தை உருவாங்குகள் என்று கூறியிருந்தார். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆழ்கடல் படகுகளை உங்களுக்கு மானிய அடிப்படையில் வழங்க முடியும். ஆனாலும் தெற்கில் உள்ளவர்களை நம்பியே நீங்கள் தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆழ் கடலுக்குச் செல்வதற்கான பயிற்சிகளைப் பெற வேண்டும். உதவித் தொகை கொடுத்துப் பயிற்றுவிக்க முன்வந்துள்ளனர். அதைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன் ஆகியோரும் முதலமைச்சருடன் சென்றிருந்தனர்.