நீண்ட நாட்களின் பின்னர் யாழில் தாழப்பறந்த உலங்கு வானூர்தி!
நீண்ட நாட்களின் பின்னர் யாழ். நகர்ப் பகுதியில் இலங்கை விமானப் படையினருக்கு சொந்தமான உலங்கு வானூர்தி மிகத் தாழ்வாக பறந்தமையினால் மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
எனினும் எதற்காக இன்று உலங்குவானூர்தி தாழ்வாகப் பறந்தது என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
இலங்கை விமானப்படையின் 66 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன் ஒரு கட்டமாக யாழில் முப்படையினரும் கலந்து கொண்ட கண்கவர் வாகனங்களின் பவனி இடம்பெற்றன.
யாழ். ஏ-9 வீதி வழியாக இடம்பெற்ற இந்தப் பவனி நிகழ்வில் விமானப்படை வீரர்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான முப்படையினர் பங்குபற்றிய மோட்டார்ச் சைக்கிள் பவனி, வாகனங்களின் பவனி என்பன இடம்பெற்றன.
குறித்த வாகனங்களின் பவனிக்கு மேலாகச் சுமார் ஒரு பனையளவு உயரத்தில் ஹெலிகொப்டர் மிகவும் தாழ்வாகப் பறந்து சென்றது. குறித்த காட்சியை சற்றும் எதிர்பாராத யாழ்.மக்கள் பலரும் ஆச்சரியத்துடனும் அதேவேளை ஒரு வித அச்ச உணர்வுடனும் பார்வையிட்டனர்.
குறித்த விசேட நிகழ்விற்கு நூற்றுக் கணக்கான பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.