நியூஸிலாந்துக்கு எதிராக கராச்சியில் நடைபெற்றுவரும் 2ஆவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது போட்டியில் 319 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான், போட்டியின் 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு ஓட்டமும் பெறாமல் 2 விக்கெட்களை இழந்து இக்கட்டான நிலையில் இருக்கிறது.
இரண்டாவது பந்தில் ஆரம்ப வீரர் அப்துல்லா ஷபிக்கின் விக்கெட்டை டிம் சௌதீ நேரடியாகப் பதம் பார்த்ததை அடுத்து இராக்காப்பாளனாக கடைநிலை ஆட்டக்காரர் மிர் ஹம்ஸாவை பாகிஸ்தான் ஆடுகளம் அனுப்பிவைத்தது. ஆனால், அவர் 3ஆவது ஓவரில் இஷ் சோதியின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அத்துடன் 4ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இமாம் உல் ஹக் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
போட்டியின் கடைசி நாளான நாளைய தினம் பாகிஸ்தான் அணி நிதானத்துடனும் பொறுமையுடனும் துடுப்பெடுத்தாடத் தவறினால் நியூஸிலாந்தின் வெற்றியை அவ்வணியினால் தடுக்க முடியாமல் போகும்.
போட்டியின் 4ஆம் நாளான இன்று வியாழக்கிழமை (05) காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 407 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பாகிஸ்தான் 408 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.
தனது 5ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி கன்னிச் சதம் குவித்த சவூத் ஷக்கீல் 125 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
நியூஸிலாந்து பந்துவீச்சில் அஜாஸ் பட்டேல், இஷ் சோதி ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸ் நிறைவில் 48 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த நியூஸிலாந்து 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 277 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.
டொம் லெதம், டொம் ப்ளண்டெல், மைக்கல் ப்றேஸ்வெல் ஆகியோர் அரைச் சதங்களைப் பெற்றனர்.
எண்ணிக்கை சுருக்கம்
நியூஸிலாந்து 1ஆவது இன்: 449 (டெவன் கொன்வே 122, டொம் லெதம் 71, மெட் ஹென்றி 68 ஆ.இ., டொம் ப்ளண்டெல் 51, அப்ரார் அஹ்மத் 149 – 4 விக்., நசீம் ஷா 71 – 3 விக்.)
பாகிஸ்தான் 1ஆவது இன்: 408 (சவூத் ஷக்கீல் 125 ஆ.இ., இமாம் உல் ஹக் 83, சர்பராஸ் அஹ்மத் 78, அஜாஸ் பட்டேல் 88 – 3 விக்., இஷ் சோதி 95 – 3 விக்.)
நியூஸிலாந்து 277 – 5 விக். டிக்ளயார்ட் (மைக்கல் ப்றேஸ்வெல் 74 ஆ.இ., டொம் பளண்டெல் 74, டொம் லெதம் 62)
பாகிஸ்தான் 2ஆவது இன்: ஒரு ஓட்டமும் பெறாமல் 2 விக்கெட்களை இழந்துள்ளது.